டாப் ஆர்டர் சொதப்பல்; நியூசி. பந்து வீச்சில் அசத்தல்: 209 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 209 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்ததைப் பற்றி...
நியூசிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 209 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்கனு பே ஓவலில் திடலில் இன்று (நவ. 15) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரை வெல்லும் கட்டாயத்தில் இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் இறங்கின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்டனர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ரோஹித் சர்மா 7 ரன்களில் மேத்யூ ஃபிஸ்ஸர் பந்து வீச்சில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றம் அளிக்க, வந்த வேகத்தில் விராட் கோலியும் 5 ரன்களில் மேத்யூவிடம் வீழ்ந்தார். 3 பௌண்டரிகள் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட் 18 ரன்கள் எடுத்து ஜேக்கப் டஃப்பியிடம் விக்கெட்டை இழந்தார்.
இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்னர், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களும், அக்ஷர் பட்டேல் 46 ரன்களும் (5 பௌண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தாலும் மற்றொரு முனையில் நிதானத்தைக் கடைப்பிடித்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
நமன் திர் 22 ரன்களும், ஆகிப் நபி 5 ரன்கள், அறிமுக வீரர் யாஷ் தாக்குர் ரன் ஏதுமின்றி வெளியேறினர். 58 பந்துகளில் 46 ரன்கள் (3 பௌண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து 9-ஆவது விக்கெட்டாக பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் கைகோத்த முகமது சிராஜ் - அர்ஷ்தீப் சிங் இருவரும் சேர்ந்து அதிரடி காட்டினர்.
இவர்களின் அதிரடியில் இந்திய அணி 200 ரன்களையும் கடந்தது. அசத்தலாக இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்ட அர்ஷ்தீப் மற்றும் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடித்த முகமது சிராஜ் இருவரும் தலா 14 ரன்கள் எடுத்தனர். முகமது சிராஜ் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். நியூசிலாந்து அணியின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத இந்திய அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நியூசிலாந்து அணித் தரப்பில் கேப்டன் மிட்செல் சாண்டனர் மற்றும் ஜேக்கப் டஃப்பி தலா 3 விக்கெட்டுகளும் மேத்யூ ஃபிஸ்ஸர் 2 விக்கெட்டுகளும், பிளேர் டிக்னர் மற்றும் பிரேஸ்வெல் இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.