இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது பற்றி...

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடா்களை கைப்பற்றியுள்ளது. இதன் தொடா்ச்சியாக இரண்டு ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 121 ஓவர்களில் 368 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஹென்றி நிக்கோல்ஸ் ஆட்டமிழக்காமல் 175 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 118 ரன்களும் குவித்து அணியை மீட்டனர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 720 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இந்தியத் தரப்பில் கே.எல். ராகுல் (136), ரிஷப் பந்த் (119*) ஆகியோர் சதமடித்தனர். ஷுபமன் கில் (98), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (85), தேவ்தத் படிக்கல் (80) ஆகியோரும் சிறப்பாக விளையாடியதால் இந்தியாவுக்கு 352 ரன்கள் முன்னிலை கிடைத்தது.
Advertisement
Advertisement
352 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து, 4-ஆம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றியை எதிர்நோக்கி 5-ஆம் நாளான இன்று பந்துவீசிய இந்திய வீரர்களால், நாள் முழுவதும் 75 ஓவர்கள் வீசியும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது. குறிப்பாக, 6-ஆவது விக்கெட்டிற்கு இணைந்த டேரில் மிட்செல் (49* ரன்கள்) மற்றும் கிளென் பிலிப்ஸ் (26* ) ஆகியோர் 258 பந்துகளை எதிர்கொண்டு 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.
இந்தியத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், பும்ரா, வாஷிங்டன் சுந்தர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 120 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்திருந்தபோது, அந்த அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாத சூழலில் போட்டியை டிராவில் முடித்துக்கொள்ள இரு அணிகளும் சம்மதித்தன. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.