டி20-ல் இரட்டைச் சதத்தை தவறவிட்ட பிரியன்ஷ் ஆர்யா.. 19 சிக்ஸர்கள் விளாசி உலக சாதனை!
டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதத்தைத் தவறவிட்ட தில்லி அணி கேப்டன் பிரியன்ஷ் ஆர்யாவைப் பற்றி...
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் தில்லி அணியின் கேப்டன் பிரியன்ஷ் ஆர்யா 19 சிக்ஸர்கள் விளாசி வியக்க வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) நடத்தப்படும் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொடரில் ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாடும் 38 மாநில மற்றும் உள்நாட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.
குரூப்-பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு மற்றும் தில்லிகள் அணிகள் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் செவ்வாய்க்கிழமை மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆண்ட்ரே சித்தார்த் முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
அதன்படி, தில்லி அணியின் கேப்டன் பிரியன்ஷ் ஆர்யாவும் யாஷ் துல்லும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். யாஷ் 8 ரன்களில் ஆட்டமிழந்து 30 ரன்களில் முதல் விக்கெட் விழுந்தாலும் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார் பிரியன்ஷ் ஆர்யா.
ராணா 17 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க, மறுமுனையில் பந்துவீச்சாளர்களைச் சிதறடித்த ஆர்யா, 36 பந்துகளில் சதத்தை எட்டினார். இதில் 12 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.
ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிய ஆர்யாவின் ஆட்டம் இறுதிவரை தொடர்ந்தது. டி20 போட்டிகளில் இரட்டைச் சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமளிக்கும் வகையில் 18.2 ஓவரில் 68 பந்துகளில் 181 ரன்கள் எடுத்து பிரியன்ஷ் ஆர்யா ஆட்டமிழந்து இரட்டைச் சதத்தையும் தவறவிடார். அதில், 7 பௌண்டரிகளும் 19 சிக்ஸர்களும் அடங்கும். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தில்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்கள் குவித்தது.
276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய தமிழ்நாடு 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
சாதனை படைத்த பிரியன்ஷ் ஆர்யா
181 ரன்கள் விளாசிய பிரியன்ஷ் ஆர்யா, 7 ரன்களில் மேலும் ஒரு சாதனையைத் தவறவிட்டார். தென்னாப்பிரிக்க பிரீமியர் லீக்கில் நைட்ஸுக்கு எதிரான போட்டியில் டைட்டன்ஸ் வீரர் 20 வயதான லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 79 பந்துகளில் 15 பௌண்டரிகள், 13 சிக்ஸர்கள் உள்பட 188* ரன்கள் குவித்திருந்தார். இதுவே டி20 போட்டிகளில் இதுவரை அதிகபட்சமாக தொடர்கிறது.
அதேபோன்று ஒரே டி20 இன்னிங்ஸில் 19 சிக்சர்களை விளாசியதன் மூலம், இந்திய அளவில் புனித் பிஷ்த் அடித்த 17 சிக்சர்கள் சாதனையை பிரியன்ஷ் ஆர்யா முறியடித்தார். சர்வதேச அளவில் 19 சிக்சர்கள் விளாசிய நியூசிலாந்து வீரர் பின் ஆலன் உலகச் சாதனையையும் அவர் சமன் செய்தார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வீரர் பதிவு செய்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற புதிய சாதனையையும் பிரியன்ஷ் ஆர்யா படைத்துள்ளார். நடப்பாண்டு (2026) ஐபிஎல் தொடரில் தில்லி அணிக்காக விளையாடிய கே.எல். ராகுல், பஞ்சாப் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் எடுத்த 152 ரன்களே இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த சாதனையையும் பிரியன்ஷ் ஆர்யா தகர்த்துள்ளார்.