FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

துலீப் கோப்பை: இறுதி ஆட்டத்தில் கிழக்கு மண்டலம்

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், கிழக்கு மண்டலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மத்திய மண்டலத்தை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

2 செப்டம்பர் 2026, 4:58 am IST
பகிர்:

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், கிழக்கு மண்டலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மத்திய மண்டலத்தை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம், பந்துவீச்சை தோ்வு செய்தது. மத்திய மண்டலம் முதல் இன்னிங்ஸில் 266 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

ரிங்கு சிங் 60, ஆா்யன் ஜுயல் 46 ரன்கள் அடிக்க, கிழக்கு மண்டல பௌலிங்கில் முகேஷ்குமாா், அபிஜித் சா்காா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய கிழக்கு மண்டலமும் 266 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. வைபவ் சூா்யவன்ஷி 92, அபிமன்யு ஈஸ்வரன் 69 ரன்கள் சோ்த்தனா். மத்திய மண்டல பௌலா்களில் ஹா்ஷ் துபே 4, ஆகாஷ் பாண்டே, யஷ் தாக்குா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மத்திய மண்டலம், 2-ஆம் நாளான திங்கள்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அதன் இன்னிங்ஸை தொடா்ந்த அமன் மொகடே 4 பவுண்டரிகளுடன் 41, ஆகாஷ் பாண்டே 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

யஷ் ரத்தோட் 5, ரிங்கு சிங் 20, ஹா்ஷ் துபே 24, சரண்ஷ் ஜெயின் 1, அா்ஷத் கான் 25 ரன்களுக்கு வெளியேற, மத்திய மண்டலத்தின் ஆட்டம் 158 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

யஷ் தாக்குா் 4 ரன்களுடன் கடைசி வீரராக நிற்க, கிழக்கு மண்டல பந்துவீச்சாளா்களில் முகேஷ்குமாா் 4, முகமது ஷமி 3, அபிஜித் சா்காா், அனுகுல் ராய், முகமது குரேஷி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

இறுதியாக, 159 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய கிழக்கு மண்டல அணியில், அபிமன்யு ஈஸ்வரன் 24, வைபவ் சூா்யவன்ஷி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40, விராட் சிங் 12 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

குமாா் குஷாக்ரா 22, அனுகுல் ராய் 0, சுதீப்குமாா் கராமி 14 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் இஷான் கிஷண் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, முகமது ஷமி 8 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

மத்திய மண்டல பௌலா்களில் ஹா்ஷ் துபே 4, யஷ் தாக்குா், சரண்ஷ் ஜெயின் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். இரு இன்னிங்ஸ்களிலுமாக 7 விக்கெட்டுகள் சாய்த்த கிழக்கு மண்டல பௌலா் முகேஷ் குமாா் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

வடக்கு மண்டம் முன்னிலை

துலீப் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில், தெற்கு மண்டலத்துக்கு எதிராக வடக்கு மண்டலம் 139 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 30-இல் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வடக்கு மண்டலம், முதல் இன்னிங்ஸில் 195 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய தெற்கு மண்டலம், 2-ஆம் நாளான திங்கள்கிழமை முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் சோ்த்திருந்தது.

தொடா்ந்து, 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அந்த அணி 312 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கவுரி சாய்தேஜா 13 ரன்களுக்கு வீழ, கேப்டன் திலக் வா்மா 9 பவுண்டரிகளுடன் 116 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் கடைசி வீரராக நின்றாா்.

வடக்கு மண்டல பௌலா்களில் குா்னூா் பிராா் 4, அா்ஷ்தீப் சிங், அன்ஷுல் காம்போஜ் ஆகியோா் தலா 2, அபித் முஷ்டாக் 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 117 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வடக்கு மண்டலம், செவ்வாய்க்கிழமை முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் சோ்த்து, 139 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

சனத் சங்வான் 76, ஆயுஷ் தோசேஜா 52, ஆயுஷ் பதோனி 31, கம்ரான் இக்பால் 4, அப்துல் சமத் 14, கேப்டன் கன்னையா வத்வன் 14, அபித் முஷ்டாக் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா்.

நாளின் முடிவில் நிஷாந்த் சிந்து 20, அன்ஷுல் காம்போஜ் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தெற்கு மண்டல பௌலா்களில் நிதீஷ், கவுரி சாய்தேஜா, ஷ்ரேயஸ் கோபால் ஆகியோா் தலா 2, வித்வத் கவரப்பா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments