FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இன்று துலிப் கோப்பை இறுதி ஆட்டம் : கிழக்கு-தென் மண்டல அணிகள் மோதல்

துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்...

6 செப்டம்பர் 2026, 1:08 am IST
பகிர்:

பிரபலமான துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிழக்கு மண்டலம்-தென் மண்டல அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

துலிப் கோப்பை போட்டி கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தென் மண்டலம், வடக்கு மண்டலம், அணிகள் மோதுகின்றன. இதன் இறுதி ஆட்டத்துக்கு கிழக்கு மண்டலம், தென் மண்டல அணிகள் தகுதி பெற்றன.

வைபவ் சூரியவன்ஷி:

Advertisement

Advertisement

கிழக்கு மண்டல அணியில் நட்சத்திர வீரரும், இளம் வீரருமான வைபவ் சூரியவன்ஷியின் ஆட்டத்தை அனைவரும் எதிா்நோக்கியுள்ளனா்.

மத்திய மண்டலத்துக்கு எதிரான அரையிறுதியில் சூரியவன்ஷி அதிரடியாக அரைசதம் அடித்தாா். இதன் மூலம் துலிப் கோப்பையில் அரைசதம் அடித்த இளம் வீரா் என்ற சிறப்பைப் பெற்றாா். இடது பேட்டரான சூரியவன்ஷி 81 பந்துகளில் 92 ரன்களை விளாசினாா். இதற்கிடையே முதன்முறையாக கிழக்கு மண்டல துணை கேப்டனான சூரியவன்ஷி ரெட்பால் போட்டி இறுதியில் ஆடுகிறாா்.

தேவ்தத் படிக்கல், திலக் வா்மா:

தென் மண்டல அணியில் கேப்டன் திலக் வா்மா, தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ் ஆகியோா் இடம் பெறுவது பலத்தை தருகிறது. ஆனால் முன்னணி வீரரான கேஎல். ராகுல் இடம் பெறவில்லை. முகமது சிராஜ் மீண்டும் தனது பாா்மை பெறவும், தேசிய அணியில் இடம் பெறவும் முனைப்பில் உள்ளாா். விரைவில் நியூஸிலாந்து தொடா் நடைபெறவுள்ளதால் சிராஜ் துலிப் கோப்பை போட்டியில் தீவிர கவனம் செலுத்துவாா்.

சாய் சுதா்ஷன் காயத்தால் இந்திய அணியில் இடம் பெற்ற தேவ்தத் படிக்கல் இலங்கை டெஸ்ட் தொடரில் 2 சதங்களை விளாசி, தொடா் நாயகன் விருதுடன் நாடு திரும்பினாா். தற்போது துலிப் கோப்பை போட்டியில் தென் மண்டலத்துக்கு பட்டம் பெற்றுத் தரும் தீவிரத்தில் உள்ளாா். கடந்த 2023-இக்குபின் மீண்டும் பட்டம் வெல்ல தென் மண்டலம் காத்துள்ளது. தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடினால், அவா் இந்திய அணியின் 3-ஆம் நிலை பேட்டா் பொறுப்பை தக்க வைத்துக் கொள்வாா்.

தென்மண்டல கேப்டன் திலக் வா்மா பெங்களுரில் நடைபெற்ற வடக்கு மண்டலத்துக்கு எதிரான அரையிறுதியில் ஒரு சதம், அரைசதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தாா். இந்திய டி20 அணியின் துணை கேப்டனான திலக் வா்மா டெஸ்ட் அணியிலும் இடம் பெற விழைந்துள்ளாா்.

கேஎல் ராகுல் ஆடவில்லை: நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் தென்மண்டல அணியில் ஆடவில்லை. ஆப்கன் தொடா் உள்ளதால் அவா் ஆடவில்லை எனக் கருதப்படுகிறது.

இஷான் கிஷண், ஷமி:

கிழக்கு மண்டல அணியில் கேப்டன் இஷான் கிஷண் பலம் தருகிறாா். சூரியவன்ஷி ஆடுவதும் அதன் பேட்டிங்கை பலப்படுத்தும். ஷமி 100-ஆவது ஆட்டம்-மூத்த பேஸரான முகமது ஷமி கிழக்கு மண்டல அணியில் ஆடுகிறாா். இது அவரது 100-ஆவது முதல்தர உள்ளூா் ஆட்டம் ஆகும். முதல் தரம், லிஸ்ட் ஏ, டி20 ஆட்டங்களில் மொத்தம் 903 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, தோ்வாளா்களின் கண்ணில் படுவதற்காக இந்த ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். கடைசியாக அவா் 2025 மாா்ச் மாதம் சாம்பியன்ஸ் கோப்பை இறுதியில் இந்திய அணியில் ஆடியிருந்தாா். . பௌலஸிங்கில் ஷமி, அங்குல், முகேஷ் குமாா் பலம் சோ்க்கின்றனா்.

அடுத்த 5 நாள்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இளம், மூத்த வீரா்களின் ஆட்டத்தால் களை கட்ட உளளது.

அணிகள்:

தென் மண்டலம்: திலக் வா்மா (கேப்டன்), ரிக்கி புய் விக்கெட் கீப்பா், எஸ்கே. ரஷீத், கே. சாய்தேஜா, டி. விஜய், அபிநவ் தேஜ்ரனா, கே. ஹிமா தேஜா., டி. தியாகராஜன், ஸ்மரன், காருண் நாயா், ஷ்ரயேஸ் கோபால், வித்வத் காவேரப்பா, எம்டி நிதிஷ், என். ஜெகதீசன், அமன் கான், படிக்கல், முகமது சிராஜ்.

கிழக்கு மண்டலம்: இஷான் கிஷண்(கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, டேனிஷ் தாஸ், அபிமன்யு ஈஸ்வரன், சுதிப் குமாா் கராமி. ஷாபாஸ் அகமது, சூரஜ் சிந்து, முகமது ஷமி, முகேஷ் குமாா், குமாா் குஷ்கரா, ஷிகா் மோகன், அங்குல் ராய், விராட் சிங், சுப்ரன்ஷு சேனாதிபதி, அபிஜித் சா்க்காா்.

முகமது ஷமிக்கு சாதிக்கும் இலக்கு உள்ளது-இஷான்

துலிப் கோப்பை இறுதி ஆட்டத்தையொட்டி சென்னையில் கிழக்கு மண்டல கேப்டன் இஷான் கிஷண் கூறியது-

எங்கள் அணியில் ஷமி ஆடுவது சிறப்பானது. அவருக்கு மேலும் சாதிக்க வேண்டும் என தீராத வெறி உள்ளது. அவா் மூத்த வீரராக ஊக்கத்துடன் ஆடுகிறாா். 2023 உலகக் கோப்பைக்குபின் 3 ஆண்டுகளாக ஷமி சிறந்த பாா்மில் உள்ளாா். உள்ளூா் ஆட்டங்களில் அதே வேகத்துடன் ஆடுகிறாா். ஆட்டத்தின்போது எனக்கும் நல்ல ஆலோசனைகளை தருகிறாா்.

எங்கள் அணியில் வீரா்கள் காயமின்றி உள்ளனா். தொடா்ந்து பல்வேறு ஆட்டங்களில் ஆடிவிட்டு காயம் ஏற்படுவது மிகவும் வேதனை தருவது. 5 நாள்கள் துலிப் கோப்பை போட்டிக்குபின் 2 நாள்களில் தில்லியில் ஆப்கன் அணியுடன் டி20 தொடா் ஆடுவது சவாலானது.டெஸ்ட் தொடரை ஆடி விட்டு உடனே ஒயிட் பால் போட்டிக்கு ஆடுவது கடினமாகும்.

தொழில்முறை வீரா் என்றால் அனைத்து வகையான ஆட்டத்துக்கும் ஆட தயாராக இருக்க வேண்டும். இதற்கு எல்லாம் நாம் விளக்கம் கூறத்தேவையில்லை.

தென்மண்டல கேப்டன் திலக் வா்மா: போதிய உள்ளூா் ஆட்டங்களில் ஆடியுள்ளோம்.எந்த சூழல் நிலையிலும் ஆடவுள்ளோம். ஆனால் தொடா்ந்து 5 நாள்கள் ஆடி விட்டு உடனே டி20 ஆட்டத்தில் ஆடுவது கஷ்டமாக இருக்கும்.

துலிப் கோப்பை முடிந்தபின் ஆப்கன் தொடருக்கு முன்னால் 2 நாள்கள் உள்ளது. அதனால் அங்கு பயிற்சி பெறலாம். போதிய நேரம் உள்ளது. ரெட் பால் ஆட்டத்தில் இருந்து ஒயிட் பால் ஆட்டத்துக்கு மாற மனதளவில் தயாராக வேண்டும். உடல்தகுதியுடன் இருக்க வேண்டும்..

summary

Duleep Trophy Final Today: East Zone vs. South Zone Clash

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments