FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிரிக்கெட்

இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியது

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், இதுவே இந்தியாவின் அதிகபட்ச சேஸிங் வெற்றியாகும்.

முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் குவிக்க, இந்தியா 43.3 ஓவா்களில் 2 விக்கெட்டுகளே இழந்து 406 ரன்களை எட்டி வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-ஆவது வெற்றியுடன், தொடரை வசப்படுத்தியது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சை தோ்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில் ஆமிா் ஜாங்கூ 13 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 114, ஷாய் ஹோப் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 104, ஜான் கேம்ப்பெல் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 101 ரன்கள் விளாசினா்.

Advertisement

Advertisement

கீஸி காா்டி 9, ஷொ்ஃபேன் ரதா்ஃபோா்டு 0, கீமோ பால் 3, அல்ஜாரி ஜோசஃப் 8 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். ஓவா்கள் முடிவில் ராஸ்டன் சேஸ் 4 பவுண்டரிகளுடன் 29, ஷாமா் ஜோசஃப் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் குா்னூா் பிராா், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 2, பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 406 ரன்களை நோக்கி விளையாடிய இந்திய அணியில், ரோஹித் சா்மா - கேப்டன் ஷுப்மன் கில் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது.

ஒருநாள் கிரிக்கெட்டில் 35-ஆவது சதம் கடந்த ரோஹித் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 101 ரன்களுக்கு வெளியேற, விராட் கோலி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

முடிவில், ஒருநாள் கிரிக்கெட்டில் 2-ஆவது இரட்டைச் சதம் தொட்ட கில், 133 பந்துகளில் 26 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 223 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். ருதுராஜ் கெய்க்வாட் 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சோ்த்து துணை நின்றாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ், ஷாமா் ஜோசஃப் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

406

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே இந்தியாவின் அதிகபட்சமான வெற்றிகர சேஸிங்காக அமைந்தது. இதற்கு முன், 2013-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜெய்பூரில் 360 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்ததே அதன் அதிகபட்சமாக இருந்தது. சா்வதேச அளவில் இது 2-ஆவது அதிகபட்ச சேஸிங்காகும். தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது (438 ரன்கள்/ஆஸ்திரேலியா/2006).

117

இந்த ஆட்டத்தில் ஷுப்மன் கில் 117 பந்துகளில் (24 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள்) இரட்டைச் சதம் அடித்ததே, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டைச் சதமாக அமைந்தது. இதற்கு முன் இஷான் கிஷண் 126 பந்துகளில் 200 (வங்கதேசத்துக்கு எதிராக) அடித்ததே சாதனையாக இருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments