FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஷமி, அஸ்வின், ஜடேஜா அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியா 263 ரன்கள்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்துள்ளது. 

Updated On : 17 பிப்ரவரி 2023, 5:53 pm IST
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் இன்று தொடங்கியுள்ளது. 2017-க்குப் பிறகு தில்லியில் டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது. தில்லியில் தனது 100-வது டெஸ்டை விளையாடுகிறார் புஜாரா.

டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணி ஒரு வேகப்பந்து வீச்சாளர், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடமில்லை.

50 ரன்கள் வரை வந்தபிறகு ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. 15 ரன்களில் ஷமி பந்துவீச்சில் வார்னர் ஆட்டமிழந்தார். வந்தவேகத்தில் நான்கு பவுண்டரிகள் அடித்த லபுஷேன், 18 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதே ஓவரில், புதிதாகக் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், ரன் எதுவும் எடுக்காமல் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஒரே ஓவரில் இரு முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் அஸ்வின். 

Advertisement

Advertisement

முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. 74 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்கள் எடுத்த கவாஜாவும் 1 ரன்னுடன் டிராவிஸ் ஹெட்டும் களத்தில் இருந்தார்கள்.

ஹேண்ட்ஸ்காம்ப்

நன்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹெட், 12 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கவாஜா - ஹேண்ட்ஸ்காம்ப் நல்ல கூட்டணி அமைத்தார்கள். 125 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து நன்கு விளையாடி வந்த கவாஜா, ஜடேஜா பந்தில் ராகுலின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரியை டக் அவுட் செய்தார் அஸ்வின்.

ஆஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளையின்போது 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. கம்மின்ஸ் 23, ஹேண்ட்ஸ்காம்ப் 36 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

33 ரன்கள் எடுத்துத் தாக்குப்பிடித்த கம்மின்ஸ், ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதே ஓவரில் மர்ஃபி ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் ஆனார். பிறகு லயன் 10 ரன்களிலும் மேத்யூ 6 ரன்களிலும் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்கள். பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 142 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 72 ரன்களை எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்துள்ளது. ஷமி 4 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

இந்திய அணி முதல் நாள் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 13, ராகுல் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments