முகப்பு

முதல் வெற்றி கண்டது திருப்பூர்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 10-ஆவது ஆட்டத்தில் திருப்பூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்து, போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

6 ஆகஸ்ட் 2024, 6:22 pm
முதல் வெற்றி கண்டது திருப்பூர்
பகிர்:

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 10-ஆவது ஆட்டத்தில் திருப்பூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்து, போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
 முதலில் நெல்லை 18.2 ஓவர்களில் 124 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, அடுத்து ஆடிய திருப்பூர் 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எட்டி வென்றது.
 முன்னதாக, மழையால் சற்று தாமதமான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திருப்பூர் பந்துவீச தீர்மானித்தது. நெல்லை பேட்டிங்கில் தொடக்க வீரர் ஸ்ரீ நிரஞ்சன் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். லக்ஷ்மீஷா சூர்யபிரகாஷ் 2 பவுண்டரிகளுடன் 10, கேப்டன் அருண் கார்த்திக் 4 ரன்களுடன் 4-ஆவது ஓவரில் நடையைக் கட்டினர்.
 பின்னர் அருண் குமார் 2, லக்ஷய் ஜெயின் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு வெளியேற, 6-ஆவது வீரராக களம் புகுந்த சோனு யாதவ் சற்று நிலைத்து ரன்கள் சேர்த்தார். மறுபுறம் ரித்திக் ஈஸ்வரன் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 15 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். இந்நிலையில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 35 ரன்கள் அடித்த சோனு யாதவ் ரன் அவுட் செய்யப்பட்டார்.
 எஞ்சிய பேட்டர்களில் லக்ஷ்மி நாராயணன் விக்னேஷ் 1 பவுண்டரியுடன் 5, குருசாமி அஜிதேஷ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20, சந்தீப் வாரியர் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, நெல்லை ஆட்டம் முடிவுக்கு வந்தது. திருப்பூர் பெளலிங்கில் புவனேஸ்வரன் 5, கணேசன் பெரியசாமி 2, சாய் கிஷோர் 1 விக்கெட் கைப்பற்றினர்.
 பின்னர் திருப்பூர் பேட்டிங்கில் தொடக்க ஜோடியான ராதாகிருஷ்ணன் - துஷார் ரஹேஜா முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டது. இதில் ராதாகிருஷ்ணன் 5 பவுண்டரிகளுடன் 34, ரஹேஜா 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ராஜேந்திரன் விவேக் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு வெளியேறினார். பாலச்சந்தர் அனிருத் 2 பவுண்டரிகளுடன் 15, கணேஷ் 3 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தி இறுதியில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 நெல்லை பெளலிங்கில் சோனு யாதவ் 2, லக்ஷய் ஜெயின் 1 விக்கெட் வீழ்த்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.