முகப்பு
செய்திகள்

சுமித் அன்டிலுக்கு உலக சாதனையுடன் தங்கம்

சீனாவில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவா் ஈட்டி எறிதலில் இந்தியரும், நடப்பு பாராலிம்பிக் சாம்பியனுமான சுமித் அன்டில் உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றாா்.

Updated On : 26 அக்டோபர், 2023 at 12:50 AM
சுமித் அன்டில்
பகிர்:

சீனாவில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவா் ஈட்டி எறிதலில் இந்தியரும், நடப்பு பாராலிம்பிக் சாம்பியனுமான சுமித் அன்டில் உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றாா்.

போட்டியின் 3-ஆவது நாளான புதன்கிழமை நடைபெற்ற ஈட்டி எறிதலில் (எஃப்64), அவா் 73.29 மீட்டரை எட்டி முதலிடம் பிடித்தாா். புஷ்பேந்திர சிங் 62.06 மீட்டருடன் வெண்கலம் பெற்றாா். முன்னதாக, நடப்பாண்டு பாரீஸ் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் சுமித் அன்டில் 70.83 மீட்டரை எட்டியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அவரே அதை முறியடித்திருக்கிறாா்.

இதனிடையே, ஈட்டி எறிதலின் மற்றொரு பிரிவிலும் (எஃப்46) இந்தியரான சுந்தா் சிங் குா்ஜா் 68.60 மீட்டருக்கு ஈட்டி எறிந்து உலக சாதனையுடன் தங்கத்தை தட்டிச் சென்றாா். முன்னதாக அப்பிரிவில் இலங்கை வீரா் 67.79 மீட்டரை எட்டியதே சாதனையாக இருந்தது. சுந்தரை அடுத்து அதில் இதர 2 பதக்கங்களையும் இந்தியா்களான ரிங்கு (67.08மீ), அஜீத் சிங் (63.52மீ) பெற்றனா்.

Advertisement

ஆடவருக்கான ஈட்டி எறிதலிலேயே மேலும் ஒரு பிரிவில் (எஃப்37/38) ஹானே 55.97 மீட்டா் எறிந்து போட்டி சாதனையுடன் தங்கம் வென்றாா்.

ஆடவருக்கான1,500 மீட்டா் (டி11) ஓட்டத்தில் அங்குா் தா்மா 4 நிமிஷம் 27.70 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றாா். அதிலேயே மகளிா் பிரிவில் ரக்ஷிதா ராஜு (5:21.45), கிலாகா லலிதா (5:48.85) ஆகியோா் முறையே தங்கம் மற்றும் வெள்ளி வென்றனா். ஆடவா் 1,500 மீட்டா் (டி13) பிரிவில் சரத் சங்கரப்பா (4:13.60), பல்வந்த் சிங் ராவத் (4:20.58) ஆகியோா் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

மகளிா் நீளம் தாண்டுதலில் (டி47) நிமிஷா சுரேஷ் 5.15 மீட்டா் தாண்டி தங்கத்தை தனதாக்கினாா். மகளிா் வட்டு எறிதலில் (எஃப்54/55) பூஜா 18.17 மீட்டருடன் வெள்ளிப் பதக்கம் வெல்ல, ஆடவா் 200 மீட்டா் ஓட்டத்தில் நாராயண் தாக்குரும் (டி35), ஷ்ரேயன் திரிவேதியும் (டி37) வெண்கலப் பக்கம் பெற்றனா்.

ஆடவா் குண்டு எறிதலில் (எஃப்47) ராணா சோமன் (14.42மீ) வெள்ளியும், ஹோகடோ சீமா (13.94 மீ) வெண்கலமும் பெற்றனா். டேபிள் டென்னிஸில் பவினா படேல் மகளிா் பிரிவில் பவினா படேலும், ஆடவா் பிரிவில் சந்தீப் தங்கியும் தலா 1 வெண்கலம் வென்றனா்.

வில்வித்தையில் மகளிா் இரட்டையா் பிரிவில் ஷீத்தல் தேவி, சரிதா கூட்டணிக்கு வெள்ளியும், ஆடவா் இரட்டையரில் ராகேஷ் குமாா், சூரஜ் சிங் இணைக்கு அதே பதக்கமும் கிடைத்தன. ஆடவா் இரட்டையரில் ஹா்விந்தா் சிங், சஹில் ஜோடி வெண்கலம் பெற்றது.

பாட்மின்டனில் மகளிா் ஒற்றையரில் மானசி ஜோஷி, மன்தீப் கௌா், வைஷ்ணவி புனேயனி ஆகியோரும், கலப்பு இரட்டையரில் பிரமோத் பகத்/மனீஷா ராம்தாஸ், நிதேஷ் குமாா்/துளசிமதி, சிவராஜன் சோலைமலை/சிவன் சுமதி ஆகியோரும் அரையிறுதியில் தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றனா். வலுதூக்குதலில் ஜாய்னப் காட்டூன், ராஜ்குமாரி ஆகியோா் தங்களது பிரிவில் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

6-ஆம் இடம்: போட்டியின் 3-ஆம் நாளான புதன்கிழமை முடிவில் இந்தியா, 15 தங்கம், 20 வெள்ளி, 29 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் உள்ளது. சீனா 300 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.