FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காலிறுதியில் சிந்து, அஷ்மிதா

பி.வி.சிந்து, அஷ்மிதா சாலிஹா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

24 மே 2024, 6:11 am
பகிர்:

மலேசியாவில் நடைபெறும் சா்வதேச பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, அஷ்மிதா சாலிஹா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

இப்போட்டியில் பங்கேற்ற இந்தியா்களில், தற்போது இவா்கள் இருவா் மட்டுமே களத்தில் உள்ளனா்.

Advertisement

Advertisement

காலிறுதிக்கு முந்தைய சுற்றில், மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் சிந்து, 21-13, 12-21, 21-14 என்ற கேம்களில், தென் கொரியாவின் சிம் யு ஜின்னை 59 நிமிஷங்கள் போராடி வென்றாா். அதேபோல், அஷ்மிதா சாலிஹா 21-19, 16-21, 21-12 என்ற கேம்களில், 3-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் பெய்வென் ஜாங்கை 43 நிமிஷங்கள் போராடி வீழ்த்தி அசத்தினாா்.

எனினும், ஆடவா் ஒற்றையரில் கிரண் ஜாா்ஜ் 13-21, 18-21 என்ற கணக்கில், 5-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் லீ ஜி ஜியாவிடம் 44 நிமிஷங்களில் தோல்வியைத் தழுவினாா்.

மகளிா் இரட்டையா் பிரிவில், சிம்ரன் சிங்கி/ரித்திகா தாக்கா் ஜோடி 17-21, 11-21 என, 2-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் பியா்லி டேன்/தினா முரளிதரன் இணையிடம் 32 நிமிஷங்களில் வீழ்ந்தது. அதேபோல், 7-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணையும் 18-21, 22-20, 14-21 என, தென் கொரியாவின் சங் ஷுவோ யுன்/யு சியென் ஹுய் ஜோடியிடம் 1 மணி நேரம் 10 நிமிஷங்கள் போராடித் தோற்றது.

ஆடவா் இரட்டையரில், கிருஷ்ண பிரசாத்/சாய் பிரதீக் கூட்டணி 11-21, 9-21 என, 3-ஆம் இடத்திலிருந்த சீனாவின் ஹி ஜி டிங்/ரென் ஜியாங் யு ஜோடியிடம் 31 நிமிஷங்களில் வீழ்ந்தது.

கலப்பு இரட்டையரில் சுமீத் ரெட்டி/சிக்கி ரெட்டி இணை 9-21, 15-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மலேசியாவின் சென் டாங் ஜி/டோ இ வெய் கூட்டணியிடம் 35 நிமிஷங்களில் தோல்வி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.