FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியா - ஆப்கன் டி20 தொடர் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம், மொஹாலியில் வியாழக்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது. 

7 பிப்ரவரி 2024, 8:51 pm IST
பகிர்:

மொஹாலி: இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம், மொஹாலியில் வியாழக்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது. 
இவ்விரு அணிகளிடையே நடைபெறும் முதல் இருதரப்பு வெள்ளைப் பந்து தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி இருதரப்பு டி20 தொடர் இது. எனவே அணி, போட்டிக்கான தயார்நிலையில் உள்ளதை மதிப்பிட இந்தத் தொடர் கடைசி வாய்ப்பாகும். 
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்கள், டி20 அணியில் சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு இணைந்திருப்பதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை. 
கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பவர்பிளேயில் அதிரடி காட்டிய கேப்டன் ரோஹித் சர்மா, இந்தத் தொடரிலும் அதைச் செய்வார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்றோர் அணியில் இருந்தாலும், ரோஹித்துடன் இணைந்து ஷுப்மன் கில் அணியின் இன்னிங்ûஸ தொடங்க வாய்ப்புள்ளது. 
தென்னாப்பிரிக்க தொடர் அவருக்கு சோபிக்காமல் போன நிலையில், அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள இந்தத் தொடர் கில்லுக்கு சரியான களமாக இருக்கும். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா காயத்தால் விலகியிருக்கும் நிலையில், ரிங்கு சிங் மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கிறார். 
அணியில் இஷான் கிஷண் விடுபட்டிருக்க, விக்கெட் கீப்பர் வாய்ப்புக்கு ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன் இருக்கின்றனர். ஷிவம் துபேவும் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் இருக்க, சுழற்பந்துவீச்சுக்கு குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். 
மறுபுறம், ஆப்கானிஸ்தான் அணியில் அதன் பிரதான சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் காயம் காரணமாக தொடரில் விளையாடவில்லை. அணியில் முதலில் அவர் சேர்க்கப்பட்டாலும், அறுவைச் சிகிச்சை முடிந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதால் அவர் களம் காணவில்லை. 
ஆனாலும், டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் சற்று சவால் அளிக்கும் அணியாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் பிரதான அணிகளிடமும் ஆப்கானிஸ்தான் பலம் காட்டியது நினைவுகூரத்தக்கது. 
இப்ராஹிம் ஜர்தான், ஹஸரதுல்லா ஜஸாய், நஜிபுல்லா ஜர்தான், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்க, நவீன் உல் ஹக், குல்பதின் நயீப், ஃபஸல்ஹக் ஃபரூக்கி உள்ளிட்டோர் பெளலிங்கில் பலம் சேர்க்கின்றனர். 

ஆடுகளம்...

ஆட்டம் நடைபெறும் மொஹாலி மைதானம், பேட்டிங்கிற்கு சாதகமான 
ஆடுகளத்தை கொண்டதாகும். அங்கு இதுவரை 9 டி20 ஆட்டங்கள் நடைபெற்றதில், முதலில் பேட் செய்த அணியே 5-இல் வென்றிருக்கிறது. 

Advertisement

Advertisement

நேருக்கு நேர்...

இரு அணிகளும் இதுவரை 5 டி20 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ள நிலையில், இந்தியா 4-இல் வெற்றி பெற்றது. 1 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments