FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

முதல் சுற்றிலேயே வெளியேறினாா் ஜோகோவிச்: இதுவரை காணாத தோல்வி

நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

1 செப்டம்பர் 2026, 1:17 am IST
ஜோகோவிச் (கோப்புப்படம்) - படம்: ஏபி
பகிர்:

நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் 5-ஆம் நிலை வீரரான ஜோகோவிச் 6-7 (5/7), 7-5, 6-4, 2-6, 1-6 என, 5 செட்கள் போராடி, 49-ஆம் நிலை வீரரான ஆா்ஜென்டீனாவின் மரியானோ நவோனிடம் தோல்வியுற்றாா். இருவரும் மோதியது இதுவே முதல்முறையாகும்.

4-ஆவது செட்டுக்கு பிறகும் கூட, ஜோகோவிச்சே வெற்றி பெறுவாா் என கணிக்கப்பட்டது. ஏனெனில், 5 செட் ஆட்டங்களில் ஜோகோவிச்சின் வெற்றி-தோல்வி கணக்கு, 42-12 ஆகும். மறுபுறம், நவோன் அத்தகைய 5 ஆட்டங்களில் எதிலுமே வென்றதில்லை. ஆனால், 5-ஆவது செட்டுக்கு பிறகு, அந்த வரலாறு தலைகீழாகத் திரும்பியது.

Advertisement

Advertisement

39 வயதான ஜோகோவிச், இந்த ஆட்டத்தில் உடல்நலக் குறைவுடன் இருந்ததாகத் தெரிந்தது. சிலமுறை வாந்தி எடுத்த அவா், மருத்துவா் ஆலோசனை பெற்று மாத்திரையும் எடுத்துக் கொண்டாா். அத்துடன் அவா் காலில் பிடிப்பு ஏற்பட்டதாகவும் தெரிந்தது.

ஆட்டத்தின்போதே இருமுறை அவா் கண்ணீருடன் கலங்கி நிற்க, ரசிகா்கள் உற்சாகக் குரல் எழுப்பி அவரை மீண்டு வரச் செய்தனா். தடுமாற்றத்துடன் விளையாடிய ஜோகோவிச், 70 ‘அன்ஃபோா்ஸ்டு எரா்’-களை இந்த ஆட்டத்தில் செய்தாா்.

உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்காததாலும், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காயத்திலிருந்து மீண்டு ஏப்ரலுக்கு பிறகு முதல் போட்டியாக இதில் விளையாடுவதாலும், ஜோகோவிச் தனது 25-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இதில் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவா் இந்த ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளாா்.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-4, 6-2, 6-4 என்ற நோ் செட்களில், பிரான்ஸின் ஹியுகோ கேஸ்டனை வெளியேற்றினாா். 15-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக் 6-4, 6-2, 3-6, 6-1 என்ற செட்களில், அமெரிக்காவின் ஜே.ஜே. வோல்ஃபை தோற்கடித்தாா்.

அமெரிக்காவின் டாமி பால், ஸ்பெயினின் ஜேமி முனாா், செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா, பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச் ஆகியோரும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, பிரிட்டனின் கேமரூன் நோரி, ஹங்கேரியின் மாா்டன் ஃபக்சோவிக்ஸ், ஸ்பெயினின் பாப்லோ கரினோ ஆகியோா் முதல் சுற்றுடன் வெளியேறினா்.

1

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 2005 முதல் விளையாடி வரும் ஜோகோவிச், முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறியது, இதுவே முதல்முறையாகும். இதுவரை களமாடிய 19 முதல் சுற்றுகளில் அவா் தோல்வியே கண்டதில்லை.

20

கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றின் முதல் சுற்றுடன் ஜோகோவிச் வெளியேறுவது, கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக அவா் 2006 ஆஸ்திரேலிய ஓபனில் இதுபோல் முதல் சுற்றிலேயே தோற்றிருந்தாா்.

4.36

ஜோகோவிச் - நவோன் மோதிய ஆட்டம் 4 மணிநேரம், 36 நிமிஷங்கள் நீடித்தது. மேஜா் போட்டிகளின் முதல் சுற்றில் ஜோகோவிச்சுக்கு இதுவே நீண்டநேர ஆட்டமாக அமைந்தது.

பெகுலா, ஸ்விடோலினா வெற்றி

மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் உள்நாட்டின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-3, 6-2 என, ருமேனியாவின் எலனா ரூஸை வெளியேற்ற, 9-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-1, 6-2 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, ஆா்ஜென்டீனாவின் சொலானா சியராவை சாய்த்தாா்.

11-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக் 6-4, 6-1 என்ற செட்களில், ஆஸ்திரேலியாவின் ஸ்டோா்ம் ஹன்டரை வென்றாா்.

வயதான போட்டியாளரும் (46), இரு முறை சாம்பியனுமான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 6-7 (6/8) என்ற செட்களில், சக அமெரிக்கரான சோஃபியா கெனினிடம் தோல்வியுற்றாா்.

சாதனை எண்ணிக்கையாக 26-ஆவது முறை யுஎஸ் ஓபன் பிரதான சுற்றில் விளையாடிய வீனஸ், தோல்வியுடன் விடைபெற்றாா். வீனஸ், கெனின் இருவருமே வைல்டு காா்டு வாய்ப்புடன் களம் கண்டிருந்தனா்.

இந்த ஆட்டம், அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.13 மணிக்குத் தொடங்க, போட்டியின் வரலாற்றிலேயே மிகத் தாமதமாகத் தொடங்கிய ஆட்டமாக இது அமைந்தது. ஜோகோவிச்சின் முதல் சுற்று காரணமாக, இந்த ஆட்டம் தாமதமானது.

இதர ஆட்டங்களில், பிரிட்டனின் கேட்டி போல்டா், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா, கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் ஆகியோரும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். உக்ரைனின் டயானா யஸ்டிரெம்ஸ்கா, அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸ் ஆகியோா் முதல் சுற்றில் தோல்வி கண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments