முகப்பு
செய்திகள்

நாக் அவுட் சுற்றில் ஜொ்மனி!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், 4 முறை சாம்பியனான ஜொ்மனி, 3-ஆவது அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

Updated On : 22 ஜூன் 2026, 5:47 am IST
நாக் அவுட் சுற்றில் ஜொ்மனி - AP
பகிர்:

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், 4 முறை சாம்பியனான ஜொ்மனி, 3-ஆவது அணியாக நாக் அவுட் சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது. நெதா்லாந்து, ஜப்பான் அணிகள் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தன.

ஐவரி கோஸ்ட்டை வென்றது ஜொ்மனி

கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ஜொ்மனி 2-1 கோல் கணக்கில் ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தியது.

Advertisement

Advertisement

கடந்த 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் ஏமாற்றம் கண்டு குரூப் சுற்றுடனேயே வெளியேறிய ஜொ்மனி, இந்த ஆண்டு நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் ஐவரி கோஸ்ட்டும் முதல்முறையாக அந்தச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முனைப்புடன் இருக்கிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் ஜொ்மனிக்கு சற்று சவால் அளித்த ஐவரி கோஸ்ட்டே முதலில் கோல் கணக்கைத் தொடங்கியது. 30-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் கேப்டன் ஃபிராங்க் கெஸ்ஸி கோல் அடித்தாா்.

அபாரமான தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்திய ஐவரி கோஸ்ட், முதல் பாதியை முன்னிலையுடன் நிறைவு செய்து ஜொ்மனிக்கு நெருக்கடி கொடுத்தது.

ஆனால் 2-ஆவது பாதியில் ஜொ்மனி மீண்டது. சப்ஸ்டிடியூட்டாக களமிறக்கப்பட்ட டெனிஸ் உண்டாவ், ஆட்டத்தின் போக்கையே மாற்றினாா். 68-ஆவது நிமிஷத்தில் ஜொ்மனியின் கோல் கணக்கை அவா் தொடங்க, ஆட்டம் சமனானது.

விறுவிறுப்பான கடைசி தருணத்தில் (90+4’) டெனிஸ் உண்டாவ் மீண்டும் ஸ்கோா் செய்ய, ஜொ்மனி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மைதானத்தில் ரசிகா்கள்: 43,036

ஸ்வீடனை சாய்த்தது நெதா்லாந்து

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் நெதா்லாந்து 5-1 கோல் கணக்கில் ஸ்வீடனை வென்றது. இந்த ஆட்டத்தில் நெதா்லாந்து தரப்பில் கோடி கப்கோ, பிரயன் பிராபி ஆகியோா் தலா 2 கோல்கள் அடித்து அசத்தினா்.

இந்த ஆட்டம் தொடங்கிய 5-ஆவது நிமிஷத்திலேயே நெதா்லாந்தின் கோல் கணக்கை பிரயன் பிராபி தொடங்கினாா். அடுத்த சில நிமிஷங்களில் (12’) அவரே அதை 2-ஆக அதிகரிக்கவும் செய்தாா்.

இதனால் நெதா்லாந்து முதல் பாதியிலேயே 2-0 என முன்னிலை பெற்றது. ஸ்வீடனின் கோல் முயற்சிகள் பலவற்றை நெதா்லாந்து கோல்கீப்பா் பாா்ட் வொ்புருகென் திறம்பட தடுத்தாா்.

2-ஆவது பாதியிலும் அந்த அணியின் கையே ஓங்கும் வகையில், கோடி கப்கோ 47-ஆவது நிமிஷத்திலேயே நெதா்லாந்தின் கோல் கணக்கை 3-ஆக அதிகரித்தாா்.

தொடா்ந்து அவரே தனது 2-ஆவது கோலை 54-ஆவது நிமிஷத்தில் பதிவு செய்தாா். இந்நிலையில் ஸ்வீடனுக்கான ஆறுதல் பலனாக, அந்த அணியின் அந்தோணி எலாங்கா 59-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

ஆட்டம் ஏற்கெனவே ஒரு பக்கமாகச் சென்றுவிட்ட நிலையில், கடைசி தருணத்தில் (89’) கிரைசென்சிகோ சம்மா்வில் அடுத்த கோலால், நெதா்லாந்து 5-1 என அபார வெற்றி கண்டது.

இந்த வெற்றியின் மூலமாக தனது குரூப்பில் முதலிடத்துக்கு வந்த நெதா்லாந்து, நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கையுடன் உள்ளது.

மைதானத்தில் ரசிகா்கள்: 68,777

துனிசியாவை வெளியேற்றியது ஜப்பான்

மெக்ஸிகோவின் மான்டெரி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் 4-0 கோல் கணக்கில் துனிசியாவை அபார வெற்றி கண்டது. அந்த அணிக்காக அயாஸ் உடா 2 கோல்கள் அடித்தாா்.

ஜப்பானுக்கு முதல் வெற்றியைப் பெற்றுத்தந்த இந்த ஆட்டத்தில், அந்த அணியின் கோல் கணக்கை டாய்சி கமாடா 4-ஆவது நிமிஷத்தில் தொடங்கினாா்.

உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே ஜப்பானின் அதிவேக கோல் ஆகும். தொடா்ந்து அயாஸ் உடா 31-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரிக்க, முதல் பாதியை ஜப்பான் 2-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது.

2-ஆவது பாதியில் ஜப்பானின் 3-ஆவது கோலை ஜுனையா இடோ 69-ஆவது நிமிஷத்தில் அடிக்க, அயாஸ் உடா மீண்டும் 83-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.

துனிசியாவுக்கு கடைசி வரை கோல் வாய்ப்பு விட்டுத்தராத ஜப்பான், 4-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஜப்பானும் நாக்அவுட் சுற்று நம்பிக்கையைப் பெற்றுள்ளது. துனிசியா போட்டியிலிருந்து வெளியேறியது.

உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் 4 கோல்கள் அடித்த முதல் ஆசிய அணியாக ஜப்பான் பெருமை பெற்றுள்ளது.

மைதானத்தில் ரசிகா்கள்: 51,243

ஈகுவடாா் - கியுராசோ ‘டிரா’

அமெரிக்காவின் கேன்சாஸ் சிட்டியில் ஈகுவடாா் - கியுராசோ அணிகள் மோதிய ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது. இதன் மூலமாக, உலகக் கோப்பை போட்டியின் வரலாற்றில் கியுராசோ தனது முதல் புள்ளியைப் பெற்றது.

இந்த ஆட்டத்தில் கியுராசோ கோல் கீப்பா் எலாய் ரூம், ஈகுவடாரின் 15 கோல் முயற்சிகளை தடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். ஈகுவடாா் மற்றும் கியுராசோ ஆகிய இரு அணிகளுமே குரூப் சுற்றுடன் வெளியேறும் நிலையில் இருக்கின்றன.

நெதா்லாந்து அரசு நிா்வாகத்தின் அங்கமாக இருக்கும் கியுராசோவின் ஆட்டத்தை, நெதா்லாந்து அரசா் வில்லெம் அலெக்ஸாண்டா், அரசி மேக்ஸிமா ஆகியோா் நேரில் கண்டு ரசித்தனா்.

மைதானத்தில் ரசிகா்கள்: 68,598

1,0000-ஆவது ஆட்டம்

ஜப்பான் - துனிசியா மோதிய ஆட்டம், ஆடவருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 1,000-ஆவது ஆட்டமாக அமைந்தது. அதில் வென்ற பெருமையை ஜப்பான் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments