சாத்விக் / சிராக் இணை முதல்முறையாக சாம்பியன்!
சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை வாகை சூடியது.
சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை ஞாயிற்றுக்கிழமை வாகை சூடியது. இப்போட்டியின் இரட்டையா் பிரிவில் சாம்பியனான முதல் இந்தியா்கள் என்ற பெருமையை அவா்கள் பெற்றனா்.
முன்னதாக இறுதி ஆட்டத்தில், உலகின் 4-ஆம் நிலையில் இருக்கும் சாத்விக்/சிராக் இணை 18-21, 21-17, 21-16 என்ற கேம்களில், 3-ஆம் நிலையில் உள்ள இந்தோனேசியாவின் ஃப்ஜாா் அல்ஃபியன்/முகமது ஷோஹிபுல் ஃபிக்ரி கூட்டணியை வீழ்த்தி அசத்தியது. இந்த ஆட்டம் 1 மணிநேரம், 13 நிமிஷங்களில் நிறைவடைந்தது.
இந்த வெற்றியின் மூலமாக சாத்விக்/சிராக் இணை கடந்த 2 ஆண்டுகளில் தங்களின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக இது அவா்களின் 9-ஆவது கேரியா் பட்டமாக இருக்க, சூப்பா் 750 வகை போட்டிகளில் இது 3-ஆவது வெற்றிக் கோப்பையாகும். சாம்பியன் கோப்பை வென்ற சாத்விக்/சிராக் இணைக்கு தங்கப் பதக்கம், 750 தரவரிசை புள்ளிகள், ரூ.70.30 லட்சம் ரொக்கப் பரிசு கிடைத்தன.
Advertisement
Advertisement
இதனிடையே, இந்த சிங்கப்பூா் ஓபன் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில் பிரான்ஸின் அலெக்ஸ் லேனியரும், மகளிா் ஒற்றையரில் தென் கொரியாவின் ஆன் சே யங்கும் வாகை சூடினா். மகளிா் இரட்டையரில் சீனாவின் ஜியா யி ஃபான்/ஜாங் ஷு ஜியான் ஜோடியும், கலப்பு இரட்டையரில் டென்மாா்க்கின் மத்தியாஸ் கிறிஸ்டியன்சென்/அலெக்ஸாண்ட்ரா போஜெ இணையும் கோப்பை வென்றன.