31 வயது என்பது புதிய 21... உலக டூர் ஃபைனல்ஸ் போட்டிக்குத் தேர்வாகிய பிவி சிந்துவின் பேட்டி!
உலக பாட்மின்டன் சம்மேளனத்தின் (பிடபிள்யூஎஃப்) உலக டூர் ஃபைனல்ஸ் போட்டிக்குத் தேர்வான பிவி சிந்துவின் பேட்டி குறித்து...
உலக பாட்மின்டன் சம்மேளனத்தின் (பிடபிள்யூஎஃப்) உலக டூர் ஃபைனல்ஸ் போட்டிக்குத் தேர்வாகி பிவி சிந்து அசத்தியுள்ளார். முன்னதாக இவர் 2018ல் இதில் சாம்பியனாகியுள்ளார்.
இந்திய வீரர்களில் உலக டூர் ஃபைனல்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் மற்றும் ஒரே இந்தியராக பிவி சிந்து சாதனை படைத்துள்ளார்.
தெலங்கானவைச் சேர்ந்த பிவி சிந்து சமீபத்தில் பிரெஞ்சு ஓபனில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார். அவர் உலக தரவரிசையில் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளதால், உலக டூர் ஃபைனல்ஸுக்குத் தேர்வாகி அசத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
வரும் டிசம்பரில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டிக்கு தேர்வான 8 பேர்களில் ஒருவராக பிவி சிந்து இருக்கிறார். டாப் 8 வீராங்கனைகள் இதில் பங்கேற்பார்கள். இது பற்றி 31 வயதான பிவி சிந்து கூறியிருப்பதாவது:
உலக தரவரிசையில் டாப் 6க்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றாக விளையாடினால், தற்செயலாகவே வெற்றியும் கிடைக்கும்; தரவரிசையிலும் முன்னேற்றம் கிடைக்கும்.
நன்றாக விளையாடி தொடர்களை வென்றால், தரவரிசைப் பட்டியல் குறித்து கவலைப்படத் தேவையில்லை. அது தானாகவே முன்னேறும். பாட்மின்டன் எப்போதுமே சவலான விளையாட்டு. களத்தில் அமைதியாக இருப்பது நல்லது.
அடுத்த ஆண்டுமுதல் ஒரு போட்டிக்கு 15 கேம்கள் என்பதால் எல்லாம் புதியதாக இருக்கும். அதற்கேற்ப நாம் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
எனக்கு முந்தைய தலைமுறை மற்றும் இளைய தலைமுறையுடனும் போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சி. நமது உடலைப் பார்த்துக்கொண்டால் எவ்வளவு நாள்களும் விளையாடலாம்.
பல விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது 30, 31, 32 வயதுகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதனால், என்னாலும் உயர்ந்த இடத்துக்கு வர முடியும் என நம்புகிறேன்.
அடுத்த தொடருக்காக நான் எனது உடலைப் பாதுகாக்க வேண்டும். சிறிய இடைவெளி அளிக்க வேண்டும். நான் இளம் வீராங்கனை அல்ல; ஆனால், 31 வயது என்பதும் புதிய 21 வயதுதான் என்பதை நாம் மறக்கக் கூடாது. அதனால், எனது உடலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறேன்.
உலக டூர் ஃபைனல்ஸில் கவனம் செலுத்துகிறேன். வெற்றி பெறுவது இனிப்பானது. நாம் செய்யும் தவறுகள் நமக்கு நன்றாகவே தெரிகிறது. முன்பெல்லாம் எப்படி இதெல்லாம் நடக்கிறதெனத் தெரியாது. ஆனால், இப்போது எல்லாமே புரிகிறது என்றார்.