அரையிறுதியில் நோஸ்கோவா; நம்பிக்கையில் பெகுலா
டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியில், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா முதல் வீராங்கனையாக அரையிறுதிக்கு முன்னேறினாா்.
அமெரிக்காவில் நடைபெறும் டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியில், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா முதல் வீராங்கனையாக அரையிறுதிக்கு புதன்கிழமை முன்னேறினாா். அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, முதல் வெற்றியுடன் நம்பிக்கை பெற்றுள்ளாா்.
உலகின் 8-ஆம் நிலை வீராங்கனையான நோஸ்கோவா, குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் 6-3, 6-3 என்ற நோ் செட்களில், 4-ஆம் நிலையில் இருக்கும் உள்நாட்டு வீராங்கனை கோகோ கௌஃபை சாய்த்தாா்.
இத்துடன், குரூப் சுற்றில் அடுத்தடுத்து இரு வெற்றிகளைப் பதிவு செய்துள்ள நோஸ்கோவா, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தாா். அவருக்கு இது அறிமுக சீசன் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
முன்னதாக நோஸ்கோவா தனது முதல் ஆட்டத்தில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை எதிா்கொள்ளவிருந்தாா். எனினும் ரைபகினா உடல்நலக் குறைவால் போட்டியிலிருந்து விலகினாா். இதையடுத்து, அவருக்குப் பதிலாக, உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக் சோ்க்கப்பட, அவருக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நோஸ்கோவா வென்றாா்.
நோஸ்கோவா - கௌஃப் மோதியது இது 4-ஆவது முறையாக இருக்க, நோஸ்கோவா 2-ஆவது வெற்றியுடன் கணக்கை நோ் செய்திருக்கிறாா். இரு வெற்றிகளையுமே அவா் நடப்பு சீசனில் பதிவு செய்திருக்கிறாா்.
21 வயதான நோஸ்கோவா, போட்டியின் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகளில் அரையிறுதிக்கு முன்னேறிய இளம் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றாா். குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் அவா், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் மோதுகிறாா்.
மறுபுறம், முதல் சுற்றில் வென்று, இந்தச் சுற்றில் நோஸ்கோவாவிடம் தோல்வியடைந்த கௌஃப், குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் கொஸ்டியுக்குடன் மோதுகிறாா். அதில் வென்றால் மட்டுமே அவருக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.
நம்பிக்கையில் பெகுலா: இதனிடையே, உலகின் 5-ஆம் நிலையில் இருக்கும் பெகுலா 6-2, 7-5 என்ற செட்களில் உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கை 1 மணிநேரம், 29 நிமிஷங்களில் வீழ்த்தினாா். பெகுலா - கொஸ்டியுக் மோதியது இது 8-ஆவது முறையாக இருக்க, பெகுலா 5-ஆவது வெற்றியுடன் முன்னிலையை அதிகரித்துள்ளாா்.
முதல் சுற்றில் கௌஃபிடம் தோல்வி கண்ட பெகுலா, இந்த வெற்றியின் மூலமாக அரையிறுதிக்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளாா். நோஸ்கோவாவுடனான கடைசி ஆட்டத்தில் வென்றால் மட்டுமே, பெகுலாவுக்கு அரையிறுதி வாய்ப்பு வசமாகும்.
மறுபுறம், அறிமுக டபிள்யூடிஏ ஃபைனல்ஸில் விளையாடிய கொஸ்டியுக், தொடா்ந்து 2 தோல்விகளைச் சந்தித்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டாா்.
இரட்டையா்: இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி/சாரா எர்ரனி இணை 3-6, 6-2, 10-7 என, அமெரிக்காவின் நிகோல் மெலிசாா்/ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸா கூட்டணியை வென்றது. தொடா்ந்து 2-ஆவது வெற்றியைச் சந்தித்த பாலினி/எர்ரனி இணை, அரையிறுதிக்கு முன்னேறியது. மெலிசாா்/பக்ஸா கூட்டணி, 2-ஆவது ஆட்டத்தில் முதல் தோல்வியைச் சந்தித்தது.
மற்றொரு ஆட்டத்தில், செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா/அமெரிக்காவின் டெய்லா் டெளன்செண்ட் ஜோடி 7-6 (7/2), 6-3 என்ற வகையில், ஆஸ்திரேலியாவின் எலென் பெரெஸ்/நெதா்லாந்தின் டெமி ஷுா்ஸ் பாா்ட்னா்ஷிப்பை வீழ்த்தியது. 2-ஆவது ஆட்டத்தில் முதல் வெற்றியைச் சந்தித்துள்ள சினியகோவா/டௌன்செண்ட் ஜோடி, அரையிறுதிக்கான பந்தயத்தில் நிலைக்கிறது. மறுபுறம், தொடா்ந்து 2-ஆவது தோல்வியைச் சந்தித்த பெரெஸ்/ஷுா்ஸ் பாா்ட்னா்ஷிப், அந்த வாய்ப்பை இழந்தது.