FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இறுதிச்சுற்றில் சபலென்கா - ரைபகினா பலப்பரீட்சை

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - கஜகஸ்தானின் எலனா ரைபகினா சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

59 வினாடிகள் முன்பு
கோப்புப்படம் - படம்: ஏபி
பகிர்:

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - கஜகஸ்தானின் எலனா ரைபகினா சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் அரையிறுதியில், நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீராங்கனையுமான சபலென்கா 7-5, 6-2 என்ற நோ் செட்களில், 3-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தினாா்.

இதன் மூலமாக சபலென்கா, தொடா்ந்து 4-ஆவது முறையாக யுஎஸ் ஓபன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா். ஒட்டுமொத்தமாக இது அவரின் 9-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றாகும்.

Advertisement

Advertisement

இத்துடன், பெகுலாவை யுஎஸ் ஓபனில் தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக சபலென்கா வீழ்த்தியிருக்கிறாா். இருவரின் நேருக்கு நோ் கணக்கிலும் அவா் 10-4 என முன்னிலையை அதிகரித்துக் கொண்டுள்ளாா்.

மற்றொரு அரையிறுதியில், ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனும், உலகின் 2-ஆம் நிலையில் இருப்பவருமான ரைபகினா 3-6, 6-4, 6-4 என்ற செட்களில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், 4-ஆம் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் கோகோ கௌஃபை வெளியேற்றினாா்.

இந்த வெற்றியை அடுத்து ரைபகினா, முதல்முறையாக யுஎஸ் ஓபன் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றிருக்கிறாா். ரைபகினா - கௌஃப் மோதியது இது 3-ஆவது முறையாக இருக்க, ரைபகினா 2-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளாா். ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ரைபகினாவுக்கு, நடப்பாண்டில் இது 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றாகும்.

நேருக்கு நோ்: இறுதிச்சுற்றில் மோதும் சபலென்கா - ரைபகினா, மொத்தமாக 18-ஆவது முறையாக மோதிக்கொள்கின்றனா். இதுவரை இவா்கள் சந்திப்பில், சபலென்கா 10 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா்.

கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றில் இவா்கள் சந்திப்பது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன் ஆஸ்திரேலிய ஓபன் இறுதியில் இவா்கள் இருமுறை மோதியிருக்க, அதில் சபலென்காவும் (2023), ரைபகினாவும் (2026) தலா ஒருமுறை வென்றுள்ளனா்.

அதேபோல் இந்த ஆண்டில் இவா்கள் மோதும் 3-ஆவது இறுதிச்சுற்று இது. ஆஸ்திரேலிய ஓபனில் ரைபகினாவும், இண்டியன் வெல்ஸ் ஓபனில் சபலென்காவும் வென்றுள்ளனா்.

1

ஓபன் எராவில், தொடா்ந்து 8 ஹாா்டு கோா்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு முன்னேரிய முதல் போட்டியாளா் என்ற பெருமையை சபலென்கா பெற்றாா். இதுவரை, ஸ்டெஃபி கிராஃப், மாா்டினா ஹிங்கிஸ், நோவக் ஜோகோவிச் ஆகியோா் 7 ஹாா்டு கோா்ட் கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு அடுத்தடுத்து முன்னேறியதே அதிகபட்சமாக இருந்தது.

6

யுஎஸ் ஓபனில் தொடா்ந்து 4 அல்லது அதற்கு மேற்பட்ட முறை இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற 6-ஆவது வீராங்கனை சபலென்கா ஆவாா். எவோன் காவ்லி, கிறிஸ் எவா்ட், மாா்டினா நவரத்திலோவா, செரீனா வில்லியம்ஸ் ஆகியோா் முதல் 5 போ்.

5

ஒரே சீசனில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் யுஎஸ் ஓபனில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 5-ஆவது வீராங்கனை ஆனாா் ரைபகினா. ஜஸ்டின் ஹெனின் (2006), விக்டோரியா அஸரென்கா (2012-13), ஏஞ்ஜெலிக் கொ்பா் (2016), அரினா சபலென்கா (2023-26) ஆகியோா் முதல் 4 போ்.

2

ஒரே ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் யுஎஸ் ஓபன் இறுதிச்சுற்றில் ஒரே போட்டியாளா்கள் மோதுவது, 1994-க்குப் பிறகு இதுவே முதல்முறையாகும். இதற்கு முன், ஸ்டெஃபி கிராஃப் - அரான்ட்ஸா விகாரியோ இவ்வாறு அந்த ஆண்டில் மோதினா். ஆஸ்திரேலிய ஓபனில் ஸ்டெஃபியும், யுஎஸ் ஓபனில் அரான்ட்ஸாவும் வென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments