கடலூரில் 6-வது நாளாக தொடர் மழை: வானமாதேவியில் 10 செ.மீ பதிவு
கடலூர் மாவட்டத்தில் 6வது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்து மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் 6வது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்து மழை பெய்தது. கடந்த திங்கட்கிழமை இரவு துவங்கிய மழை தொடர்ந்து பெய்துக் கொண்டே இருந்தது. எனினும் வெள்ளிக்கிழமை விட்டு, விட்டு மழை பெய்தது. இதே நிலைதான் சனிக்கிழமையும் நீடித்தது. காலையில் வெயில் அடிப்பதும் பின்னர் திடீரென மழை பெய்வதுமாகவே இருந்தது. இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் நிலையிலேயே இருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வானமாதேவியில் அதிகபட்சமாக 102 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மற்ற பகுதிகளில் பெய்த மழை விபரம் (மில்லி மீட்டரில்): பண்ருட்டி 94, கடலூர் 84.30, கீழச்செருவாய் 72, லால்பேட்டை 65, புவனகிரி 62, குப்பநத்தம் 61, வேப்பூர் 60, விருத்தாசலம் 58.40, சிதம்பரம் 56.40, சேத்தியாத்தோப்பு 55.20, காட்டுமன்னார் கோயில், கொத்தவாச்சேரி தலா 53, காட்டுமயிலூர், பரங்கிப்பேட்டை தலா 52, மேல்மாத்தூர் 50, அண்ணாமலை நகர் 47.20, தொழுதூர் 43, லக்கூர் 33.30, பெலாந்துறை 31, ஸ்ரீமுஷ்ணம் 24 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழைப்பதிவாக 57.56 சென்டி மீட்டர் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 3,140 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் சென்னைக்கு 40 கன அடியும், விஎன்எஸ்எஸ் வாய்க்காலில் 970 கன அடியும், வெள்ளியங்கால் வாய்க்காலில் 1310 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.
வாலாஜா ஏரியிலிருந்து 2354 கன அடி வெளியேற்றப்படுகிறது. பெருமாள் ஏரிக்கு வரும் 12,750 கன அடியும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரி தனது முழு கொள்ளவை எட்டியுள்ளது.
29.78 அடி கொண்ட வெலிங்டன் ஏரி தற்போது 22 அடியை எட்டியுள்ளது, வினாடிக்கு 1460 கன அடி வருவதால் தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.