உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்:அமைச்சர் விஜயபாஸ்கர்
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற பொன் விழாவில் அவர் பேசியதாவது:
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவத் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. குறிப்பாக, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
Advertisement
Advertisement
அதிமுக ஆட்சியில் 710 எம்பிபிஎஸ் இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இது, 7 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கியதற்கு சமம். மருத்துவத் தகவல் மேலாண்மை திட்டம் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளும் கணினியில் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம், ஒரு நோயாளி ஒரு மருத்துவமனையில் இருந்து வேறு மருத்துவமனைக்கு சென்றால் இருந்த இடத்திலேயே அவரது விவரங்களையும், மருத்துவக் குறிப்புகளையும் பெற்று விரைந்து சிகிச்சை அளிக்க முடியும் என்றார்.
முன்னதாக, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பொன்விழா நினைவாக அமைக்கப்பட்ட அலங்கார கல்வெட்டை அமைச்சர் திறந்து வைத்தார். பொன் விழா மலரும் வெளியிடப்பட்டது.
சுகாதாரத் துறையில் தமிழகம் முதலிடம்: மதுரையில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நுண்ணுயிரியல் துறையின் ஒட்டுண்ணி பாதிப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
மாநிலத்தில் மலேரியா பாதிப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் டெங்கு போன்ற தொற்று நோய் பாதிப்பு அதிகமிருந்தும், தமிழகத்தில் அது போன்ற பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்குக் கூடுதல் இடங்கள் மத்திய மருத்துவக் கழகத்திடம் இருந்து முதல்வர் ஜெயலலிதாவால் பெறப்பட்டுள்ளது. இதனால், 710-க்கும் மேற்பட்ட ஏழை மாணவ, மாணவியர் மருத்துவக் கல்வி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்வியிலும், சுகாதாரத்திலும் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது என்றார்.
மாநாட்டில், பல்வேறு மாநிலங்களில் இருந்து மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமையும் மாநாடு நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.