FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முடிவுக்கு வந்தது மீன்பிடி தடைக் காலம்!: மீன் விலை குறைய வாய்ப்பு

மீன் வளத்தை மேம்படுத்தும் நோக்கில், வங்கக் கடலில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க, விதிக்கப்பட்டிருந்த 61 நாள்கள் தடை புதன்கிழமை (ஜூன் 14) நள்ளிரவு முடிவுக்கு வந்தது.

29 ஜனவரி 2024, 8:15 pm IST
மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்ததையடுத்து சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கடலுக்குச் செல்ல விசைப்படகுகளில் ஐஸ் கட்டிகளை ஏற்றும் மீனவர்கள்.
பகிர்:

மீன் வளத்தை மேம்படுத்தும் நோக்கில், வங்கக் கடலில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க, விதிக்கப்பட்டிருந்த 61 நாள்கள் தடை புதன்கிழமை (ஜூன் 14) நள்ளிரவு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்கள், மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால், இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால், மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும். இதனால் மீன்வளம் படிப்படியாக குறையும் அபாயம் ஏற்படும் எனக் கருதி, கடந்த 2000 -ஆண்டு வங்கக் கடல் பகுதியில் 45 நாள்களுக்கு விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடைக்காலத்தை 61 நாள்களாக நீடித்து, 2015 -ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மீன்பிடி தடைக்காலம் 45 நாள்களா அல்லது 61 நாள்களா என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
61 நாள்கள் தடைக்காலம்: இதையடுத்து, தமிழகத்தில் 45 நாள்கள் தடையே கடந்த இரு ஆண்டுகளாகத் தொடர்ந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15 -ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனிடையே, இந்த ஆண்டு முதல் தடைக்காலம் 61 நாள்களாக இருக்கும் என கடந்த மே மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து தடைக் காலம் மேலும் 16 நாள்கள் நீடிக்கப்பட்டது. இந்தத் தடை புதன்கிழமை இரவு முடிவுக்கு வந்தது.
8,500 விசைப்படகுகள்: சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் 1,200 விசைப்படகுகள் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 8,500 விசைப்படகுகள் உள்ளன. ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாகக் கடலுக்குச் சென்று வரும் விசைப்படகுகளில், தடைக்காலத்தில்தான் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வழக்கம்போல் இந்த ஆண்டும் இப்பணிகள் நடைபெற்றன.
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகளை தயார்படுத்தும் பணியில் மீனவர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர். டீசல் நிரப்புதல், உணவுப் பொருள்கள், பனிக்கட்டிகளை ஏற்றுதல், வலைகளை உலர்த்தி சரிபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர்கள் மேற்கொண்டனர். இதேபோன்ற பணிகள் தமிழகத்தின் அனைத்து மீன்பிடித்துறைமுகங்களிலும் நடைபெற்றன. வியாழக்கிழமை முதல் படிப்படியாக கடலுக்குச் செல்லும் விசைப்படகுகள், ஐந்து முதல் ஏழு நாள்களுக்கு பிறகு கரை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீன் விலை குறையுமா?: பைபர் மற்றும் கட்டுமரங்கள் மூலம் குறைந்த அளவில்தான் மீன் பிடிக்க முடியும். அதேசமயம், விசைப்படகுகள் மூலம் அதிக அளவில் மீன்களை பிடிக்க இயலும். மேலும் எடை அதிகம் கொண்ட பெரிய வகை மீன்கள், இறால் உள்ளிட்டவையும் விசைப்படகுகள் மூலம் தான் கிடைக்கின்றன.
இதனால் மீன்பிடி தடைக் காலத்தில் மீன்வரத்து குறைந்து விலையும் உயர்ந்தது. தற்போது தடை நீங்கியுள்ள நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் மீன் விலை படிப்படையாகக் குறையும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மீன்பிடி தடைக் காலம் புதன்கிழமை தொடங்கியுள்ள நிலையில், மீன்வரத்தின் அளவைப் பொறுத்தே தமிழகத்தில் மீன்விலை நிர்ணயிக்கப்படும் என மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments