மு.கருணாநிதியின் இறப்புச் சான்றிதழ்: மாநகராட்சி வழங்கியது
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் இறப்புச் சான்றிதழை பெருநகர சென்னை மாநகராட்சி புதன்கிழமை வழங்கியுள்ளது.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் இறப்புச் சான்றிதழை பெருநகர சென்னை மாநகராட்சி புதன்கிழமை வழங்கியுள்ளது.
திமுக தலைவர் மு. கருணாநிதி வயது மூப்பின் காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணி அளவில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லம், ராஜாஜி அரங்கம் ஆகியவற்றில் வைக்கப்பட்டு மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவகத்தின் பின்புறம் புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.
இறப்புச் சான்றிதழ்: கருணாநிதியின் இறப்புச் சான்றிதழை பெருநகர சென்னை மாநகராட்சி புதன்கிழமை வழங்கியது. அந்தச் சான்றிதழில் தேனாம்பேட்டை மண்டலம், 123-ஆவது வார்டில் உள்ள கோபாலபுரம் 4-ஆவது தெருவில் கருணாநிதி வசித்து வந்ததாகவும், 94 வயதான அவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 7) இறந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவருடைய தாய் அஞ்சுகத்தின் பெயர் முதலிடத்திலும், தந்தை முத்துவேலின் பெயர் இரண்டாம் இடத்திலும், மனைவி தயாளுவின் பெயர் மூன்றாவது இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் இறப்பு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 8) பதிவு செய்யப்பட்டு அன்றைய தினமே இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.