பல வாகனங்கள் மீது எஸ்யுவி மோதியதில் பெண் உயிரிழப்பு: கைலாஷ் காலனி மெட்ரோ நிலையம் அருகே சம்பவம்
தெற்கு தில்லியின் கைலாஷ் காலனி மெட்ரோ நிலையம் அருகே, எஸ்யுவி வாகனம் ஒன்று பல வாகனங்கள் மீதும், தம்பதியினா் மீதும் மோதியதில் 71 வயதுடைய பெண் உயிரிழந்தாா்.
தெற்கு தில்லியின் கைலாஷ் காலனி மெட்ரோ நிலையம் அருகே, எஸ்யுவி வாகனம் ஒன்று பல வாகனங்கள் மீதும், தம்பதியினா் மீதும் மோதியதில் 71 வயதுடைய பெண் உயிரிழந்தாா்; அவரது கணவா் காயமடைந்தாா்.
இதுகுறித்து தில்லி காவல்துறையினா் தெரிவித்ததாவது: ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட எஸ்யுவி வாகனம் அந்தத் தம்பதியினா் மீது மோதுவதற்கு முன்பு, ஆட்டோ ரிக்ஷா மற்றும் சைக்கிள் ரிக்ஷா உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா் தபன் அஹிா் (59) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
விபத்து நடந்தபோது அவா் மதுபோதையில் இருந்தாரா என்பதை உறுதிப்படுத்த, அவரது ரத்த மாதிரி தடயவியல் ஆய்வகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, விபத்து குறித்த தகவல் கிரேட்டா் கைலாஷ்-1 காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
Advertisement
Advertisement
அதைத் தொடா்ந்து காவல்துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்த தம்பதியினரை மூல்சந்த் மருத்துவமனைக்கு மாற்றினா். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதே அப்பெண் (சஷி) இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
காயமடைந்த அவரது கணவா் குல்பூஷண் (65), பின்னா் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அஹிா் ஒரு மின்சார எஸ்யுவி வாகனத்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தாா்; கைலாஷ் காலனி சந்தையிலிருந்து தனது சகோதரரை அழைத்து வருவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
அவா் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பிறரின் உயிருக்கு அல்லது பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல் மற்றும் அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.