கர்ப்பம் ஆனதாக பெண்ணுக்கு சிகிச்சை: 9 ஆவது மாதத்தில் குழந்தை இல்லையெனக் கூறியதால் அதிர்ச்சி
மதுரையில் பெண் கர்ப்பம் அடைந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், 9 ஆவது மாதம் பரிசோதனைக்குச் சென்றபோது வயிற்றில் குழந்தை இல்லையெனக் கூறியதால் தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மதுரையில் பெண் கர்ப்பம் அடைந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், 9 ஆவது மாதம் பரிசோதனைக்குச் சென்றபோது வயிற்றில் குழந்தை இல்லையெனக் கூறியதால் தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மதுரை விரகனூர் கோழிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (32). மெத்தை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி யாஸ்மின் (26). இவர்களுக்கு ஏற்கெனவே ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் யாஸ்மின் மீண்டும் கர்ப்பம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதனை உறுதி செய்தார்களாம்.
அதன் பிறகு, விராதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆலோசனை மற்றும் பிரசவ சிகிச்சைக்கு சென்று வந்தனர். அங்கு யாஸ்மினை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கர்ப்பிணிக்கான ஆலோசனைக் கூறி, மருந்து, மாத்திரைகளும் கொடுத்துள்ளனர். மேலும், ஒவ்வொரு மாதமும் பரிசோதனைக்கு வரவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதன்படி, 3 மாதங்கள் விராதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யாஸ்மின் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர், தொடர் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்து, சிகிச்சை பெற்று வந்தார். அதோடு, கர்ப்பிணிக்கான உதவித் தொகை ரூ.4 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் பிரசவத்துக்கு வந்தபோது, ஸ்கேன் பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அறிகுறியே இல்லையே எனத் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த நவநீதகிருஷ்ணன் - யாஸ்மின் தம்பதி, ஆரம்பத்தில் இருந்து கர்ப்பிணிக்கான சிகிச்சை அளித்து வந்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும், மருத்துவர்கள் சரியாக பதிலளிக்கவில்லையாம்.
ஒன்பது மாதங்களாக மகப்பேறு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரசவத்துக்கு வந்துபோது குழந்தை இல்லையெனக் கூறியதால் தம்பதியினர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம், நவநீதகிருஷ்ணன் திங்கள்கிழமை புகார் கொடுத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.