தமிழகத்தில் பிரசவகால இறப்புகள் குறைந்துள்ளன: முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் பிரசவகால தாய் -சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம்: தமிழகத்தில் பிரசவகால தாய் -சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கோனேரிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள, புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் வியாழக்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது:
முதலிடம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் 2011-18 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 -ஆம் தேதி வரை ரூ.178.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2,10,481 பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் பயனாக தமிழகத்தில், பிரசவகால தாய் -சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
அகில இந்திய அளவில் மருத்துவத் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சையை அளித்து, மருத்துவச் சேவை அளிப்பதில் அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளனர்.
சிறப்பிடம்: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், எந்தவொரு ஆட்சியிலும் செய்யாத அளவிற்கு கல்வித் துறையில் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 65 கலை -அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கினார். புதிதாக பொறுப்பேற்ற அரசு கடந்த ஆண்டில் 11 அரசு கலை -அறிவியல் கல்லூரிகளை கட்டிக் கொடுத்துள்ளது.
உபரிநீரை பயன்படுத்த ஆய்வு: வெள்ளரிவெள்ளியில் எம்.பி.க்கள் வி.பன்னீர்செல்வம், அர்ச்சுனன் ஆகியோரின் நிதியுதவியுடன், மேட்டூர் அணையின் கிழக்குக்கரை கால்வாயிலிருந்து வெளியேறும் உபரிநீரை பம்ப் செய்து, ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டுசென்று, நீர் நிரப்பப்பட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் எங்கெங்கெல்லாம் உபரி நீர் இருக்கிறதோ, அந்த உபரிநீரை பயன்படுத்துவதற்காக, ஓய்வுபெற்ற 6 தலைமை பொறியாளர்களை நியமித்து தடுப்பணைகள் கட்டுதல், ஏரிகளை நிரப்புதல் போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் முதல்வர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.