FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பதிவுத்துறை ஆவணப் பதிவு: செப். 3 முதல் எஸ்எம்எஸ் வசதி அறிமுகம்

பதிவுத் துறை ஆவணப் பதிவின் ஒவ்வொரு நிலைகள் தொடர்பாக,  பொதுமக்களுக்கு செல்லிடப் பேசி வழியே தகவல் அளிக்கும் வசதி வரும் செப். 3-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:


சென்னை: பதிவுத் துறை ஆவணப் பதிவின் ஒவ்வொரு நிலைகள் தொடர்பாக,  பொதுமக்களுக்கு செல்லிடப் பேசி வழியே தகவல் அளிக்கும் வசதி வரும் செப். 3-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறைத் தலைவர் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
பதிவுத் துறையின் இணையதளம் வழியாக நேரடியாகவோ அல்லது சொந்தமாக ஆவணம் தயாரிக்கும் நிலையில் இணையதளத்தில் ஆவணத்தின் சுருக்கத்தைக் குறிப்பிட வேண்டும். இந்த நிகழ்வுகளின் போது ஆவணதாரர்கள் தங்களது செல்லிடப்பேசி எண்ணை உள்ளீடு செய்ய மென்பொருளில் இப்போது வழி செய்யப்பட்டுள்ளது. ஆவணதாரர்கள் தங்களது சரியான செல்லிடப்பேசி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
உள்ளீடு செய்தவுடன் ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவதற்கான எண்ணை அனுப்புவதற்கான வசதியை அழுத்த வேண்டும். அதனை இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். இந்த எண் பதிவுத் துறையால் சரிபார்க்கப்பட்டு செல்லிடப்பேசி எண் ஏற்றுக் கொள்ளப்படும்.
என்னென்ன பயன்கள்? ஆவணப் பதிவின் 33 வெவ்வேறு நிலைகளில் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியானது தமிழ் அல்லது ஆங்கில மொழியில் அனுப்பப்படும். முக்கியமாக பதிவுப் பணி முடிந்தவுடன் ஆவணம் திரும்ப பெற்றுச் செல்வதற்கான தகவல் அடங்கிய குறுஞ்செய்தி ஆவணதாரருக்கு அனுப்பப்படும். ஆவணம் பதிவு செய்யப்பட்டு திரும்ப வழங்கப்பட்டவுடன் பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஆவணதாரரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளப்படும். பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்ட தேதியில் ஆவணம் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்ட விவரம் உறுதி செய்யப்படும்.
ஆவணம் நிலுவை வைக்கும் நிகழ்வுகளில் என்ன காரணத்துக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். கட்டடத்துடன் கிரையம் செய்யப்படும் நிகழ்வுகளில் கட்டடக் களப் பணி மேற்கொண்ட பிறகு இழப்பு உள்ளதா என்ற விவரமும் இழப்பு உள்ளது எனில் கட்ட வேண்டிய தொகை குறித்தும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
மதிப்புக் குறைவாக உள்ள ஆவணங்களில் காரணம் கோரும் தகவல்கள், சந்தை மதிப்பு நிர்ணய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவரங்கள், செலுத்த வேண்டிய குறைவு முத்திரைத் தீர்வு, குறைவு பதிவுக் கட்டணம் போன்ற விவரங்களும் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆவணதாரரின்  செல்லிடப்பேசி எண்ணைத் தவிர்த்து வேறொருவரின் செல்லிடப்பேசி உட்புகுத்தும் நிலையில், குறுஞ்செய்திகள் அனைத்தும் பதிவிடப்பட்ட எண்ணுக்கே சென்றடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments