எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு விவசாயிகள் 566 ஆட்சேபணை மனுக்கள் அளிப்பு
சேலம் - சென்னை 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 566 ஆட்சேபணை மனுக்களை
சேலம் - சென்னை 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 566 ஆட்சேபணை மனுக்களை அளித்தனர்.
சேலம் - சென்னை 8 வழிச் சாலையை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு, முதற்கட்டப் பணிகளை முடித்துள்ளன. இதனிடையே, இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பசுமை சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையைத் தொடர்ந்து எந்தவிதப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், அண்மையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியானது. இதனிடையே, ஆட்சேபணை ஏதுமிருந்தால் 21 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம், குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, மின்னாம்பள்ளி, எருமாபாளையம், நிலவாரப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் புதன்கிழமை காலை காந்தி சிலையில் இருந்து பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை நூற்றுக்கணக்கான விவசாயிகள் பழைய பேருந்து நிலையத்தில் திரண்டனர். அப்போது ஊர்வலமாகச் செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறையினர் கூறினர். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் மற்றும் காவல் துறையினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பெண்கள் சிலரை காவல் துறையினர் தாக்கும் வகையில் செயல்பட்டதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறை உயர் அதிகாரிகள் பேசியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து, விவசாயிகளிடம் சமரசப் பேச்சு நடத்தி ஊர்வலமாகச் செல்ல அனுமதித்தனர். இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், கரும்பு மற்றும் விவசாயப் பொருள்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டு, வள்ளுவர் சிலை, பெரியார் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்களை சோதனை செய்து உள்ளே அனுமதித்ததையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த் துறை அதிகாரிகளிடம் தங்களது ஆட்சேபணை மனுக்களை அளித்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, விவசாய நிலங்களை அழித்து கொண்டு வரப்படவுள்ள இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி ஏற்கெனவே சேலம் மாவட்ட விவசாயிகள் ஆட்சேபணை மனுக்கள் அளித்துள்ளனர்.
தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, ஆட்சேபணை மனுக்களை அளித்துள்ளோம். மேலும், தங்களது ஆட்சேபணை மனு குறித்து உரிய பதில் அளிக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே, நிலம் கையகப்படுத்துவதற்கான ஏக்கருக்கு எத்தனை சர்வே எண்கள் உள்ளதோ, அந்த எண்ணிக்கையில் ஆட்சேபனை மனுக்களை வழங்கி, அதற்கு நில உரிமையாளர்கள் ரசீது பெற்று சென்றனர். சுமார் 566 ஆட்சேபணை மனுக்களை விவசாயிகள் வழங்கியதாகத் தெரிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.