புழல் ஏரி சுற்றுலாத் தலமாக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
புழல் ஏரியை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புழல் ஏரியை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாதவரத்தை அடுத்த புழல் கிராமத்தில் இருந்து சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்க ஆங்கிலேயர் காலத்தில் புழல் ஏரி உருவாக்கப்பட்டது. இந்த ஏரியின் சுற்றளவு சுமார் 32 சதுர கி.மீ. விரிந்து பரந்து விரிந்துள்ளது. இந்த ஏரி மொத்தக் கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். இதன் உயரம் 21.22 அடி உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பொறியாளர் ஜோன்ஸ் இந்த ஏரியை உருவாக்கினார். இதன்காரணமாக தண்ணீர் அளவைக் காட்டும் பகுதிக்கு ஜோன்ஸ் டவர் என பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஏரியில் 1,517 க. அடி தண்ணீர் இருப்பு உள்ளது. தினந்தோறும் சென்னை மாநகரக் குடிநீருக்காக 84 கன அடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஏரியின் அருகே மிக பிரமாண்டமான குடிநீர் சுத்திக்கரிப்பு நிலையம் உள்ளது. இங்கு புழல் ஏரி தண்ணீர் குழாய் மூலம் எடுக்கப்பட்டு சுத்திக்கரிக்கப்பட்டு சென்னை மக்களுக்காக சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீராக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த ஏரி நிரம்பியவுடன் தண்ணீர் திறந்து விடப்படும் மதகுவில் இருந்து ஜோன்ஸ் டவர் வரை சுமார் 5 கி.மீ. அளவில் ஏரிக்கரை உள்ளது. இந்த ஏரிக்கரையில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் எரிந்து வந்தன. கடந்த 2 ஆண்டுகளாக மின் விளக்குகள் எரிவதில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ. 10 கோடி செலவில் புழல் ஏரியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, மாதவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் காலை, மாலை நேரங்களில் 200க்கும் மேற்பட்டோர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஏரிக்கரையில் நடைப்பயிற்சி செய்யும் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு வருகின்றன. புழல் ஏரிக்கரையில் வழிப்பறி, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களும், தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையும் இப்பகுதியில் நடைபெற்று வருகின்றன.
புழல் ஏரிக்கரை சாலைகள் சிதிலமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்கவும், மின்கம்பங்களின் பழுதுகளை நீக்கி இரவு நேரங்களில் விளக்குகளை எரியச் செய்யவும், ஏரிக்கரைகளைச் சுற்றி அடர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றை சீரமைத்து, புழல் ஏரியை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அண்டை மாநிலத்தவர்கள் வந்து காணும் வகையில் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மாதவரம் காவல் கோட்டத்திற்கு உள்பட்ட காவல் நிலையங்களில், புழல் ஏரியின் நிகழும் குற்றங்கள் குறித்து ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு புழல் ஏரிக்கரையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபட வேண்டும். மேலும் விசேஷ நாள்கள், விடுமுறை நாள்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் புழல் ஏரியின் நுழைவு வாயில் பூட்டப்பட்டு இருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் ஏரிக்கரை எதிரே குப்பைகள் கொட்டப்படுவதாலும், குப்பைகளை எரிப்பதாலும் துர்நாற்றமும், கண்ணெரிச்சல் ஏற்படுகிறது. மேலும் இந்த குப்பைகள் ஏரித் தண்ணீரிலும் கலந்து சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் என்ற அச்சம் ஏற்படுகிறது.
இதுபோன்ற பல்வேறு குறைகள் களைந்து, புழல் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்றி அரசுக்கு வருவாய் ஈட்டவும், புழல் ஏரியை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.