காவிரி விவகாரத்தில் "கமலும், ரஜினியும் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்': கே. பாலகிருஷ்ணன்
காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ள கமலும், ரஜினியும் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என
காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ள கமலும், ரஜினியும் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கச்சநத்ததில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்ட 3 பேரின் குடும்பத்தினரை கே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கச்சநத்தம் கிராம மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக வெளியே சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரையும், வழக்கின் எதிரிகள் பட்டியலில் சேர்த்து கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாதபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது வரை கச்சநத்தம் மக்கள் இன்னும் அச்சத்துடன் ,கிராமத்தைவிட்டு வெளியேற முடியாமல் உள்ளனர். எனவே இந்த மக்கள் அச்சமில்லாமல் வாழும் நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும், தமிழகத்தில் சாதி ஒழிப்பு நடவடிக்கையில் மாநில அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: நீட் தேர்வு முடிவு வெளியானதை அடுத்து, கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் மாணவி ஒருவர் தற்கொலை செய்திருப்பது வேதனையளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரண நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஆணையம் முறையாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 18 ஆம் தேதி தூத்துக்குடி உள்பட மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ள கமலுக்கு, ரஜினியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ள இருவரும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.
பேட்டியின் போது,மார்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலர் கந்தசாமி, மாநிலக் குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.