FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சர்க்கரை ஆலைகளுக்கான புதிய நடவடிக்கைகளில் இருந்து விலக்கு தேவை: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சர்க்கரை ஆலைகள் தொடர்பான மத்திய அரசின் புதிய நடவடிக்கைகளில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 8 ஜூன் 2018, 4:37 am IST
பகிர்:

சர்க்கரை ஆலைகள் தொடர்பான மத்திய அரசின் புதிய நடவடிக்கைகளில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் விற்பனைக்கான இருப்பு என்பது 2.17 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே ஆகும். மேலும், கட்டுப்படியான மற்றும் நியாயமான விலைக்கான நிலுவைத் தொகை என்பது ரூ.226.25 கோடியாக உள்ளன.
இருப்பு வைப்பது பலன் தராது: இந்தச் சூழ்நிலையில், எங்களது மாநிலத்தில் சிக்கல்களையும், நடத்துவதில் சிரமங்களையும் சந்தித்து வரும் ஆலைகளுக்கு மொத்தமாக இருப்பு வைப்பது போன்ற நடவடிக்கைகள் எந்தப் பயனையும் தராது. அதே போன்று, உள்ளூர் சந்தையில் குறைந்தபட்ச சர்க்கரை விலையாக கிலோவுக்கு ரூ.29 என்பதும் பயனளிக்காது. எங்களது மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் போதுமான நிதியை திரும்பப் பெறுவதை உறுதிப்படுத்தாது. சர்க்கரை ஆலைகளில் கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில் இருந்து மாநில ஆதரவு விலையாக ரூ.1510.46 கோடியை நிலுவையாக வைத்துள்ளன.
விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும்...:மேலும், எத்தனால் தயாரிப்புகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்கள் மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு உடனடியாக எந்த நிவாரணத்தையும் அளித்திடாது. தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள் மிகுந்த நிதிச் சுமையுடன் செயல்பட்டு வருவதால், அது லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
சிறப்பு நிகழ்வாகக் கருதி... எனவே, தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு சிறப்பு நிகழ்வாகக் கருதி மத்திய அரசு சில சிறப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். அதன்படி, தமிழகத்தில் சர்க்கரையின் ஆண்டுத் தேவை அளவு 15 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். உற்பத்தி 5.8 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. எனவே, இருப்பு வைப்பதற்கான உச்சவரம்புகளில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்திட வேண்டும்.
விலக்கு அளிப்பது அவசியம்: கரும்பு உற்பத்தியில் 14.16 சதவீதமானது குறைந்தபட்ச ஏற்றுமதி ஒதுக்கீட்டு குறியீடாக உள்ளது. இது கரும்பு உபரியாக உள்ள மாநிலங்களுக்கு 5.82 சதவீதமாகவே உள்ளது. இதே அளவு கரும்பு ஆலைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்பு தட்டுப்பாடு காரணமாக, இந்த இலக்கை ஆலைகளும் எட்டமுடியாத நிலை உள்ளது. மாநிலத்தில் இழப்பைச் சந்தித்து வரும் சர்க்கரை ஆலைகள் ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரையையும் கிலோவுக்கு ரூ.19 என்ற விலையில் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, மத்திய அரசு இதற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
2017-18-ஆம் ஆண்டு பருவத்தில் கரும்புக்கான கட்டுப்படியான மற்றும் நியாயமான விலையை வழங்க வட்டி மானியத்தில் கடன்களை அளிக்க பரிந்துரை செய்ய வேண்டும்.
எத்தனால் சப்ளை, குறைந்தபட்ச ஏற்றுமதிக்கான குறியீடு போன்ற காரணிகளை கணக்கில் கொள்ளாமல் ஏற்கெனவே அறிவித்த ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.5.50 உற்பத்தி மானியம் வழங்கும் திட்டத்தை மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் கரும்பு ஆலைகளுக்கு விரிவுபடுத்திட வேண்டும்.
தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு... கரும்பு ஆலைகள் மற்றும் சர்க்கரை உற்பத்தி தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ய முடியாத சூழலில், இந்த நடவடிக்கைகளில் இருந்து தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments