ஸ்டெர்லைட் பிரச்னையை எழுப்ப அனுமதி மறுப்பு: திமுக எம்.எல்.ஏ.-க்கள் வெளிநடப்பு
சட்டப் பேரவையில் ஸ்டெர்லைட் தொடர்பான பிரச்னையை எழுப்ப திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சட்டப் பேரவையில் ஸ்டெர்லைட் தொடர்பான பிரச்னையை எழுப்ப திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பேரவையிலிருந்து வியாழக்கிழமை வெளிநடப்புச் செய்தனர்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு பிரச்னையை எழுப்பினார். இதற்கு பேரவைத் தலைவர் பி.தனபால் அனுமதி மறுத்தார். இதையடுத்து, பேரவைத் தலைவர் பேசியது:
பிரச்னைகளைப் பேரவையில் எழுப்புவதைத் தடுக்க விரும்பவில்லை. ஆனால், நீங்கள் குறிப்பிடும் பிரச்னையை (ஸ்டெர்லைட் விவகாரம்) நிறைய விவாதித்துள்ளோம். ஏற்கெனவே பேசி முடிவு செய்து விட்டோம். அதுகுறித்து மீண்டும் பேசி, விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள ஆணையத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்.
நீங்கள் (எதிர்க்கட்சித் தலைவர்) பேசுவதற்கு முழு வாய்ப்பு தரத் தயாராக இருக்கிறேன். ஆனால், ஏற்கெனவே பேசிய விஷயத்தை மீண்டும் பேசினால் விசாரணை ஆணையத்துக்கு பாதிப்பு ஏற்படும். ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்றார்.
அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்: சட்டப் பேரவையில் நாம் பேசக் கூடிய விஷயம் விசாரணை ஆணையத்தை பாதிக்கக் கூடிய அளவுக்கு இருக்கக் கூடாது. அதனை சட்டப் பேரவையில் விவாதத்துக்கும் எடுக்கக் கூடாது. அதனால் விசாரணை பாதிக்கும். எதிர்க்கட்சித் தலைவர் எழுப்ப விரும்பும் பிரச்னை தொடர்பாக விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அதில் முதல்வரும் விரிவாக பதில் அளித்துள்ளார். அத்துடன் முடிந்து விட்டது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பிடிவாதமாக கருத்துகளைத் தெரிவிப்பது சரியான நடைமுறையாக இருக்காது என்றார்.
திமுக வெளிநடப்பு: பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அவையில் இருந்து வெளிநடப்புச் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் பி.தனபால் அளித்த விளக்கம்:
பேரவை விதி 92-ன் படி, நீதி விசாரணையின் வரம்புக்குள் உள்ள ஒரு பிரச்னை பற்றி பேரவையில் குறிப்பிடவோ, விவாதிக்கவோ கூடாது என விதி தெளிவாக உள்ளது. இதனையே எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தேன். சாதாரண பிரச்னையாக இருந்தால் அனுமதி அளித்திருப்பேன். ஆனால், விசாரணை ஆணைய வரம்புக்குள் வரும் பிரச்னை என்பதால் அனுமதி அளிக்க முடியவில்லை. எனது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, விசாரணை ஆணைய வரம்புக்குள் வரும் பிரச்னைகளை எழுப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
இதன்பின், பேரவையில் நிகழ்வுகளில் பங்கேற்ற திமுக உறுப்பினர்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களில் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.