குமாரபாளையம் அருகே வேன் கவிழ்ந்து 6 பெண்கள் சாவு
குமாரபாளையம் அருகே நூற்பாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,
குமாரபாளையம் அருகே நூற்பாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த சடையம்பாளையம், காந்தி நகர், வேமன்காட்டுவலசு, கல்லாங்காட்டுவலசு ஆகிய பகுதிகளிலிருந்து 10-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலைக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.
கல்லாங்காட்டுவலசை கெளதம் (25) வேனை ஓட்டிச் சென்றார். குமாரபாளையம் ஆனங்கூர் சாலையில் மேட்டுக்கடை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதேவேளையில், குமாரபாளையம் நோக்கிச் சென்ற சரக்கு வாகனம், கவிழ்ந்த வேனின் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த தொழிலாளர்கள் பலத்த காயமடைந்ததோடு, இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்தனர். பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், அய்யம்மாள் (32), வள்ளியம்மாள் (54), கற்பகம் (52) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சந்திரம்மாள் (62), பெரமாயி (55), மாரியம்மாள் (58) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர். மேலும், சுப்பாயம்மாள் (55), ஆண்டிச்சாமி (60), வேன் ஓட்டுநர் கெளதம் உள்பட 9 பேர் படுகாயத்துடன் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தேவி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.