சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை
சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் யாராவது நடக்க முயன்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.
சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் யாராவது நடக்க முயன்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.
சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழகத்தில் போராட்டம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியதோடு, தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சிக் களமாக இருப்பதாக மத்திய அமைச்சர் பேசியதையும் சுட்டிக் காட்டினார்.
இதற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதில்:- திமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5.1 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வந்த கொலை வழக்குகள், அதிமுக ஆட்சியில் 2.1 சதவீதம் குறைந்தது. ஆதாயக் கொலை குற்றங்கள் திமுக ஆட்சியில் 21.4 சதவீதம் அதிகரித்து வந்த நிலையில், அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 5.5 சதவீதம் குறைந்துள்ளது. இதே போன்று, கூட்டுக் கொள்ளை, கொள்ளை, கன்னக்களவு வழக்குகளும் அதிமுக ஆட்சியில் குறைந்து வந்திருக்கின்றன.
கடும் நடவடிக்கை: அதிமுக அரசைப் பொருத்தவரை மிக வேகமாக, விரைவாக, குற்றம் செய்தவர்களைக் கண்டுபிடித்து வருகிறது. மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சில சம்பவங்கள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவ்வப்போது ஏற்படும் சட்டப் பிரச்னைகளை ஒட்டியே காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள். இந்த ஆட்சி, அந்த ஆட்சி என்பதெல்லாம் கிடையாது. உங்களுடைய ஆட்சியிலும் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிமுக அரசைப் பொருத்தவரை, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, குற்றங்களும் குறைவாக உள்ளன.
ஆனால், சில அமைப்புகள் வேண்டுமென்றே தூண்டிவிட்டு அந்தப் போராட்டத்தின் மூலமாக தங்களுக்கு ஏதாவது பெயர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிற காரணத்தால் சில பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அரசைப் பொருத்தவரைக்கும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டங்களோ, சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் செயல்களில் யாராவது நடக்க முற்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க அரசு தயங்காது என முதல்வர் பழனிசாமி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.