ஸ்டெர்லைட் விவகாரம்: அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்காதது ஏன்? முதல்வர் விளக்கம்
ஸ்டெர்லைட் விவகாரத்தில் அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்காதது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்காதது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.
சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், அங்கே இருக்கக் கூடிய மக்களின் கோரிக்கைகளைப் படிப்படியாக தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த நேரத்தில் அரசுக்கு நல்ல பெயர் வந்து விடுமோ என சில அரசியல் கட்சித் தலைவர்களும், கட்சிப் பிரமுகர்களும் வேண்டுமென்றே திட்டமிட்டுச் செயல்படுவதாக நினைக்கிறேன்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டுமென்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் போது எதற்காக அங்கே போராட்டம்? தேவையில்லாமல் பிரச்னையை உருவாக்கி அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
அமைச்சரவைக் கூட்டம்: தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவற்றை இயக்குவதற்கான சட்டமும் இருக்கிறது. அந்தச் சட்டம் அதனுடைய கடமையைச் செய்து வருகிறது. அந்த சட்டத்துக்கு உள்பட்டே தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
சட்டம் பொதுவானது: எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கை சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளை இயக்க பொதுவான சட்டம்தான் பின்பற்றப்பட்டு வருகிறது. அது ரூ.5 கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரையில் உருவாக்கப்பட்டாலும், அவற்றை இயக்குவதற்கான சட்டம் பொதுவானது.
எனவே, ஒவ்வொரு ஆலைக்கும் தனித்தனியாக அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்க வேண்டியது அவசியம் இல்லை. சட்டப்பூர்வமாக மூத்த அதிகாரிகளை அழைத்துப் பேச சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசித்த பிறகே அரசு முடிவெடுத்து அறிவித்துள்ளது என்றார் முதல்வர் பழனிசாமி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.