FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் -2வது திட்டப் பாதை: உங்கள் ஊருக்கும் ஒரு ஸ்டேஷன் வரலாம்

சென்னை மெட்ரோ ரயில் - 2வது திட்டப் பாதை அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

Updated On : 26 ஜூன் 2018, 4:10 pm IST
பகிர்:

சென்னை மெட்ரோ ரயில் - 2வது திட்டப் பாதை அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

சுமார் 55 கி.மீ. பரப்பளவில் 48 ரயில் நிலையங்களுடன் சென்னை மெட்ரோ ரயில் - 2வது திட்டப் பாதை அமைய உள்ளது. மெட்ரோ ரயில் பாதை அமையவிருக்கும் இடங்களில் வசிப்போருக்கு நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 107.55 கி.மீ. தூர மெட்ரோ ரயில் பாதையில் முதற்கட்டமாக 55 கி.மீ. பாதை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு ரூ.85 ஆயிரம் கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நிலம் கையகப்படுத்தும் பணிகள் எந்த சிக்கலும் இல்லாமல் நடக்க ஏதுவாக தமிழ்நாடு நிலம் கையகப்படுத்துதல் - வணிக ரீதியான தேவை சட்டம் 1997ன் கீழ் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வழக்கமாக உரிய இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு இழப்பீடு சட்டம், 2013ன் கீழ் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை முதலில் கண்ட சட்டப்படி நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்க உள்ளன.
 

இந்த திட்டத்துக்காக சுமார் 86 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. உரிய இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு இழப்பீடு சட்டம், 2013ன் கீழ் நிலங்களை வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் நிறுவனத்தின் அதிகாரி கூறியுள்ளார்.
 

இந்த வழித்தடம் அமையப் போகும் பெரும்பாலான நிலம் அரசு நிலமாகவே உள்ளது. இதுவரை 19 ரயில் நிலையங்கள் அமைக்க தனியார்களுக்குச் சொந்தமான இடங்களைக் கைப்பற்ற 410 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்து 29 ரயில் நிலையங்கள் அமைக்க மேலும் 400 நோட்டீஸ்கள் அனுப்பப்படும். மாதவரம், செம்பியம், பெரம்பூர், ஓட்டேரி, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கத்தில் ஜெமினி மேம்பாலத்துக்கு அருகே, சேத்துப்பட்டு, புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் 2வது திட்டப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

மாதவரம், சேத்துப்பட்டு மெட்ரோ ரயில் நிலையம், ஸ்டெர்லிங் ரோடு ஜங்ஷன் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம், ஜெமினி மெட்ரோ ரயில் நிலையம், புரசைவாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமையவிருக்கும் பகுதிகளின் நில உரிமையாளர்களுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
 

3 வழித் தடங்களில் அமையவிருக்கும் மெட்ரோ ரயில் - 2வது திட்டப் பணிக்கு ரூ.80 ஆயிரம் கோடி செலவாகும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திருத்தியமைக்கப்பட்ட திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. இது மாதவரம் - சிறுசேரி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்  - களங்கரை விளக்கம், மாதவரம் - ஷோலிங்கநல்லூர் ஆகிய பாதைகளில் 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் அமைப்பதற்கான செலவுத் தொகையாகும்.

இதில், களங்கரை விளக்கம் - பூவிருந்தமல்லி பகுதிக்கு கூடுதலாக ஒரு மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கப்படும். இதற்கு ரூ.3, 850 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.2.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டதும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2வது கட்ட திட்டப் பணிகளை விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது, மெட்ரோ ரயில் -2வது திட்டப் பணிகளில், மாதவரம் பால் பண்ணையில் இருந்து தொடங்கும் முதல் பாதை மூலக்கடை, பெரம்பூர் மார்க்கெட், அயனாவரம், டௌடன் ஜங்ஷன், சேத்துப்பட்டு மெட்ரோ, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், திருமயிலை மெட்ரோ, க்ரீன்வேஸ் ரோடு மெட்ரோ, அடையாறு டெப்போ, திருவான்மியூர் மெட்ரோ, கந்தஞ்சாவடி, மேட்டுக்குப்பம், காரப்பாக்கம், ஷோலிங்கநல்லூர், சத்தியபாமா பல்கலை, செம்மஞ்சேரி, நாவலூர், சிறுசேரி, சிப்காட் வரை அமைக்கப்பட உள்ளது.

இரண்டாவது வழித்தடத்தில் கோயம்பேடு பேருந்து நிலையம், சாய் நகர், அவிசி பள்ளி, வடபழனி, பனகல் பார்க், நந்தனம், அடையாறு கேட் ஜங்ஷன், திருமயிலை மெட்ரோ வழியாக களங்கரை விளக்கம் ரயில் நிலையங்கள் என அமைக்கப்பட உள்ளது.

3வது வழித்தடமாக மாதவரம், எம்எம்பிடி, கொளத்தூர், நாதமுனி, திருமங்கலம், கண்ணாலம்மன் நகர், வளசரவாக்கம், ராமாபுரம், சத்யாநகர், ஆலந்தூர், வனுவம்பேட்டை, கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், மேடவாக்கம், கூட்டு ரோடு, பெரும்பாக்கம் வழியாக சோழிங்கநல்லூர் ரயில் நிலையத்தில் சென்று இணைய உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments