'இரும்புத்திரை' படத்தை வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி
நடிகர் விஷால் நடித்து விரைவில் வெளியாகவுள்ள இரும்புத்திரை திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் நடித்து விரைவில் வெளியாகவுள்ள இரும்புத்திரை திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: ''நடிகர் விஷால் நடித்துள்ள இரும்புத்திரை திரைப்படம் மே 11-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஆதார் அடையாள அட்டைக்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் தவறாகப் பயன்படுத்துவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகளுடன் திரைப்படம் வெளியானால், டிஜிட்டல் இந்தியா மற்றும் ஆதார் திட்டங்கள் குறித்து மக்களிடம் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதுடன் அரசின் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள். எனவே, சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும் வரை இந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.
நீதிபதிகள் உத்தரவு: இந்த மனு நீதிபதிகள் வி.பார்த்திபன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால நீதிமன்ற அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''இந்தப் படத்தை வெளியிட மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை எப்படி ஏற்றுக்கொள்வது, படம் வெளியாகாத நிலையில் இப்படியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன என மனுதாரர் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்'' எனக் கேள்வி எழுப்பினர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில், ஆதார் அட்டைக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.