FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

53 சுற்றுலாத் தலங்களில் உணவுப் பாதுகாப்பு மையங்கள்: அமைச்சர் தகவல்

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 53 சுற்றுலாத் தலங்களில் உணவுப் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
நடமாடும் விழிப்புணர்வு வாகனம் மற்றும் விழிப்புணர்வு தகவல் மையத்தைத் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்குகிறார் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். 
பகிர்:


தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 53 சுற்றுலாத் தலங்களில் உணவுப் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் உணவு பாதுகாப்பு மையம், உணவு பாதுகாப்பு குறித்த நடமாடும் விழிப்புணர்வு வாகனம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த தகவல் மையம் ஆகியவற்றின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது: 
தரமான உணவு குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், தமிழக உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விடுமுறைக் காலமான மே மாதத்தில் பெருமளவு மக்கள் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்கின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் உணவு பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 5 சுற்றுலா தலங்கள் உள்பட தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 53 சுற்றுலாத் தலங்களில் உணவு பாதுகாப்பு மையங்கள் புதன்கிழமை முதல் செயல்படும்.
சுற்றுலாத் தலங்களில் உள்ள அனைத்து உணவு வணிகர்களையும், உணவு பாதுகாப்புத் துறையின் பதிவு பெறச் செய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு வழங்குவதை உணவு பாதுகாப்பு மையம் உறுதி செய்யும். 
சென்னையில் மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யு வணிக வளாகம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், தியாகராய நகர் ஆகிய 5 இடங்களில் உணவு பாதுகாப்பு மையங்கள் செயல்படும்.
உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாகனங்களில், பாதுகாப்பான உணவு, உணவு கலப்படம், தரமற்ற உணவு, தவறான குறியீடு உள்ள உணவு மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் மையம் அமைக்கப்படும்.
அந்த மையத்தில் தெருவோர உணவு கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவகங்களில் கவனிக்க வேண்டியவை, பழம், பழச்சாறு, குளிர்பானக் கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவு பொட்டலங்களின் விவரச் சீட்டில் கவனிக்க வேண்டிய விவரங்கள் அடங்கிய பலகைகள் காட்சிக்கு வைக்கப்படும். மேலும், உணவில் கலப்படங்களை கண்டறிய மேற்கொள்ள வேண்டிய விரைவு சோதனைகள் குறித்தும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செயல்முறை விளக்கம் அளிப்பர் என்றார் அமைச்சர். 
சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாவட்ட ஆட்சியர் வி. அன்புச்செல்வன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments