FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குட்கா ஊழல் வழக்கு: குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ், உமா சங்கர் உட்பட 4 பேர் கைது

குட்கா ஊழல் வழக்கில், குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ், அவரது தொழில் கூட்டாளி உமா சங்கர் குப்தா உட்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

சென்னை: குட்கா ஊழல் வழக்கில், குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ், அவரது தொழில் கூட்டாளி உமா சங்கர் குப்தா உட்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
 
குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ் கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த டைரியின் அடிப்படையில்தான் குட்கா ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த டைரியில் குறிப்பிடப்பட்டு இருந்தவர்களின் வீடுகளில் நேற்று சிபிஐ சோதனை நடத்திய நிலையில், மாதவ ராவ்விடம் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் இறுதியில் மாதவ ராவ், அவரது தொழில் கூட்டாளி உமா சங்கர் குப்தா, காவல்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே இந்த வழக்கில் தரகர்களாக செயல்பட்ட 2 பேர் கைதான நிலையில், தற்போது மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

கடந்த 2016 ஜூலை 8-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சென்னை செங்குன்றத்தில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தாவின் குட்கா கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கியவர்கள் குறித்த ஆவணங்கள் சிக்கின. இதில் அரசுக்கு ரூ.250 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. சென்னை காவல் ஆணையராக இருந்த இப்போதைய டிஜிபி தே.க.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட 23 காவல்துறையினர், கலால் வரித்துறையினர், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த 2016 ஆகஸ்ட் 11-ஆம் தேதி அப்போதைய தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது. கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலா அறையில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில், குட்கா ஊழல் குறித்து சில ரகசியக் கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. தமிழக அரசின் உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: இது தொடர்பான திமுக மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி கடந்த ஏப்ரல் 26-இல் உத்தரவிட்டது. தில்லி சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த மே 30-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. 

கிடங்குக்கு சீல் வைப்பு: கடந்த ஒரு மாதமாக சென்னையில் முகாமிட்டிருந்த சிபிஐ அதிகாரிகள் கடந்த 31-இல் குட்கா கிடங்குக்கு சீல் வைத்தனர்.

35 இடங்களில் சோதனை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு, மேற்கு முகப்பேரில் உள்ள தமிழக டிஜிபி தே.க.ராஜேந்திரன் வீடு, நொளம்பூரில் உள்ள சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வீடு, அண்ணாநகர் மேற்கில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு, மேற்கு மாம்பலம் மதுரை வீரன் தெரு காவலர் குடியிருப்பில் உள்ள உதவி ஆணையர் மன்னர் மன்னன் மற்றும் 3 உதவி ஆய்வாளர்கள் வீடுகளில் புதன்கிழமை காலை 7 மணியளவில் சோதனையை நடந்தது. சோதனை தொடங்கியபோது விஜயபாஸ்கரும், தே.க. ராஜேந்திரனும் தங்களின் வீடுகளில் இருந்தனர். ஜார்ஜ் வீட்டில் சோதனையின்போது அவரது உறவினர்களே இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடும் கட்டுப்பாடுகள்: சோதனை நடைபெற்ற இடங்களில் எவரையும் சிபிஐ அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. 

பாதுகாப்புக் கருதி, விஜயபாஸ்கர் வீட்டின் தெரு முனையிலேயே பத்திரிக்கையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பத்திரிக்கையாளர்களுக்கும், அங்கு நின்ற போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காலையில் தொடங்கிய சோதனை மாலை 5 மணி வரை நடைபெற்றது. 

முக்கிய ஆவணங்கள்: டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் சோதனையில் இரு பைகளில் ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். சோதனை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் முக்கிய ஆவணங்கள், டைரிகள், ஹார்ட் டிஸ்க்குகள், பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே, அவற்றின் விவரங்களை கூற முடியும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 மாநிலங்களில் சோதனை
குட்கா ஊழல் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிர மாநிலங்களில் சிபிஐயின் 500 அதிகாரிகள் 35 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். செங்குன்றம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளரும், இப்போது தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத்தின் ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பு வீடு, ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள அவரது உறவினர் வீடு, விழுப்புரம் டவுன் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் வீடு, சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், லட்சுமி நாராயணன், சிவக்குமார், மத்திய கலால்துறை அதிகாரிகள் குல்சார்பேகம், எஸ்.கே.பாண்டியன், சேஷாத்திரி, விற்பனை வரித்துறை அதிகாரிகள் பன்னீர்செல்வம், குறிஞ்சிசெல்வம், கணேசன், கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments