சமூகத்தில் பயனுள்ளவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி
சமூகத்தில் பயனுள்ளவராக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
சமூகத்தில் பயனுள்ளவராக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு அவர் வியாழக்கிழமை வருகை புரிந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, காஞ்சி காமகோடி பீடத்தின் நிர்வாக அறங்காவலர் ராகவன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு, 60 அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆதிசங்கரர் சிலைக்கு பிரணாப் முகர்ஜி மலர் தூவி வணங்கினார்.
பின்பு, பழங்கால கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் பிரிவைப் பார்வையிட்டார்.
இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் வகுப்பறைகள், கருத்தரங்குகள், ஆய்வகங்கள் அடங்கிய 4 அடுக்குமாடிக் கட்டடத்தை (வெள்ளி விழாக் கட்டடம்) திறந்து வைத்து அவர் பேசியதாவது:
கோயில்கள் நிறைந்த புராதனப் பகுதியாக காஞ்சிபுரம் விளங்குகிறது. காஞ்சி சங்கர மடம், கல்வி, கலாசார, பண்பாடு மற்றும் சேவைகளில் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. இதில் சங்கர மடத்தின் பீடாதிபதிகளின் பங்கு மிக முக்கியமானது. தொன்மை வாய்ந்த இந்திய நாட்டில் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு ஆச்சாரியர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் கல்வி, இலக்கியம், நாகரீகம், கலாசாரம், பன்முகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தொன்மை மாறாமல், கற்பித்தும், வழிநடத்தியும் வந்துள்ளனர்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதேபோல், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன.
இந்த நோக்கில், தற்போது இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் என பல்வேறு துறைகளில் வளர்ச்சி அவசியமானது. அதோடு, ஆட்சியாளர்கள், குடிமக்களிடையே அன்பு, மனிதத்துவம் ஆகிய உயர் பண்புகளும் முக்கியமானவை.
காஞ்சிபுரத்தில் 68ஆவது பீடாதிபதியான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயரில் இந்தப் பல்கலைக்கழகம் அமையப் பெற்றுள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவ்வகையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் பழமையான சம்ஸ்கிருதம், இலக்கியம், நவீன துறைகளான இயந்திரவியல், மேலாண்மை, தொழில்நுட்பம், கலைத்துறை உள்ளிட்ட துறைகள் உள்ளன. தற்போதைய பொருளாதாரச் சூழலில் தரமான கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இது விளங்கி வருகிறது.
நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார, சமூகப் பிரச்னைகளைச் சந்திப்பதற்கு தரமான கல்வியறிவோடு, சமூகப் புரிந்துணர்வும் அவசியமாகிறது. எனவே, மாணவர்கள் இச்சமூகத்தில் பயனுள்ளவர்களாக உருவெடுக்க வேண்டும் என்றார் அவர்.
பல்கலைக்கழக துணை வேந்தர் விஷ்ணு போத்தி வரவேற்றுப் பேசினார்.
பல்கலைக்கழக பதிவாளர் சீனுவாசு நன்றி கூறினார். விழாவில், பல்கலைக்கழக நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.