ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. ஆய்வு
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உற்சவர் சிலை மாற்றப்பட்டதாக எழுந்தபுகாரையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல்
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உற்சவர் சிலை மாற்றப்பட்டதாக எழுந்தபுகாரையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் வியாழக்கிழமை அக்கோயிலில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டார்.
வைணவத் தலங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் கடந்த 2015 ஆம் ஆண்டில் மகா சம்ப்ரோக்ஷணம் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்காக கோயிலில் நடைபெற்ற திருப்பணியின் போது பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றதாகவும், உற்சவர் சிலை மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரெங்கராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்குகளை விசாரித்து, 6 வாரங்களுக்கு அறிக்கை வழங்குமாறு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர், வியாழக்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயில் வந்தனர். முதலில் சக்கரத்தாழ்வார் சன்னதியின் பின்பகுதிக்குச் சென்ற இக்குழுவினர் திருவரங்கத்தமுதனார் சன்னதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் பிற்பகல் 2.40 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயில் வந்தார். அவர் நேரடியாக கருவறை சன்னதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். கருவறையிலுள்ள பெரிய பெருமாள், உற்சவரான நம்பெருமாள் சிலை போன்றவை குறித்தும், திருப்பணியின்போது இங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர், கம்பத்தடி ஆஞ்சநேயர் பகுதிக்கு வந்த ஐ.ஜி. பொன். மாணிக்கவேல், ஏ.டி.எஸ்.பி. ராஜாராம் உள்ளிட்டோர் ஆயிரங்கால் மண்டபம் பகுதிக்குச் சென்று, அங்குள்ள வரதராஜர் சன்னதியில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அதே பகுதியில் வைக்கப்பட்டிருந்த பழைய சிலைகள், திருப்பணியின் போது எடுக்கப்பட்ட பழைய இரும்புக் கதவுகள், கதவுகள் குறித்தும் கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமனிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, கோதண்டராமர், பரதமபதநாதர் சன்னதிகளுக்குச் சென்ற ஐ.ஜி., திருப்பணியின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சென்று, அங்குள்ள திருவரங்கத்தமுதனார் சன்னதிக்குச் சென்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து உள்ஆண்டாள் சன்னதி, கோதண்டராமர் சன்னதி பகுதிக்குச் சென்ற ஐ.ஜியிடம், சிலர் திருப்பணியின் போது இங்கிருந்த பழைய கட்டடங்களை மாற்றிவிட்டதாகவும், மரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்தனர். இதை கேட்டறிந்த பின்னர், வேணுகோபாலன் சன்னதிக்குச் சென்ற ஐ.ஜி., திருப்பணியின் போது இப்பகுதியில் செய்யப்பட்ட பணிகள் எவை, அனுமதி பெற்றுதான் பணிகள் செய்யப்பட்டதா போன்றவை குறித்து இணை ஆணையரிடம் கேட்டறிந்தார்.
அப்போது, கோயிலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த ஸ்ரீரங்கம் ரெங்கராஜன், ஆலய மீட்புக் குழுவைச் சேர்ந்த சிலர், திருப்பணியின் போது, இப்பகுதியில் புதையல் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஆனால், அதுகுறித்த விவரங்கள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்தனர். பின்னர், கூரத்தாழ்வார்சன்னதி பகுதிக்குச் சென்ற ஐ.ஜி., சன்னதிக்குப் பின்பகுதியிலுள்ள பழைய கற்குவியல்கள் இருக்கும் பகுதி குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், திருப்பணியின் போது கோயிலில்களில் இருந்த கலசங்கள், சன்னதிகளின் கதவுகள் மாற்றப்பட்டுவிட்டதாகவும் புகார் தெரிவித்தனர். அதுகுறித்து விசாரணையின் போது சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கலாம் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்.
ஆய்வு நீடிக்கும்'
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல்.
ஆய்வைத் தொடர்ந்து பொன். மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 42 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை வழங்க வேண்டும் என்பதால், வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது போன்ற ஆய்வு இக்கோயிலில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
ஸ்ரீரங்கத்தைச் சுற்றி வசிப்பவர்கள், தங்களிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ஆயுதப்படை மைதானம் அருகிலுள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து அளிக்கலாம். அதுபோல, சாட்சிகளை யாரேனும் மிரட்டக்கூடாது என அறிவுறுத்தியிருக்கிறோம். அவ்வாறு மிரட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 25 சதவிகிதப் பணிகள்தான் முடிந்துள்ளன. 75 சதவிகிதப் பணிகள் இன்னும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வோம்.
திருக்கோயில் நிர்வாகம் சார்பிலும், புகார் அளித்தவர்கள் சார்பிலும் தங்கள் தரப்பு ஆதாரங்களை அளிப்பதற்கு காலஅவகாசம் வழங்கப்படும். தங்களிடம் உள்ள ஆதாரங்கள் அவர்கள் உரிய முறையில் அளிக்கலாம் என்றார் பொன். மாணிக்கவேல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.