14-ஆவது நிதிக் குழுக் காலத்தில் தமிழகத்துக்கு இழப்பீடு அளிக்கவில்லை: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு
14-ஆவது நிதிக் குழுக் காலத்தில் தமிழகத்துக்கு போதுமான இழப்பீடு அளிக்கப்படவில்லை என்று 15-வது நிதிக் குழுவிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மனு அளித்துள்ளார்.
14-ஆவது நிதிக் குழுக் காலத்தில் தமிழகத்துக்கு போதுமான இழப்பீடு அளிக்கப்படவில்லை என்று 15-வது நிதிக் குழுவிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மனு அளித்துள்ளார்.
என்.கே.சிங் தலைமையிலான நிதிக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது முதல்வர் நிதிக்குழுவிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்:
14-ஆவது மற்றும் அதற்கு முந்தைய நிதிக் குழுக்கள், தமிழகத்திடம் நியாயமற்ற மற்றும் விஞ்ஞானப்பூர்வமற்ற அணுகுமுறைகளையே காட்டியுள்ளன. இதனை 7.8 கோடி மக்களும் பார்த்து வருகிறார்கள். 14-ஆவது நிதிக் குழுக் காலத்தில் தமிழக அரசானது எந்தவித இழப்பீடுகளையோ அல்லது வருவாய்ப் பற்றாக்குறைக்கான மானியத்தையோ பெறவில்லை.
ஆனால், 15-வது நிதிக் குழுவானது, பொருளாதார ஏற்ற-இறக்க சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடைமுறையில் உள்ளதைக் கருத்தில் கொள்ள வேண்டும். வரி வருவாய்ப் பகிர்வில் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே நியாயமான பங்களிப்பை அளிக்க வேண்டும்.
தமிழக திட்டங்கள்: சென்னை பெருநகரின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அதன் வளர்ச்சிக்காக ரூ.4,800 கோடி மானியம் அளித்திட வேண்டும். கடல் அரிப்பைத் தடுப்பதற்கான திட்டத்துக்கு ரூ.260 கோடி, கடல் அரிப்பால் பாதித்த பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி வழங்கப் பரிந்துரைக்க வேண்டும்.
கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சூழலியல் திட்டங்கள் மற்றும் வளங்களை மேலாண்மை செய்யும் பணிகளுக்காக ரூ.1,900 கோடி, சாயக் கழிவுகளில் ரசாயனத்தை பூஜ்ய நிலைக்குக் கொண்டு வரும் திட்டத்துக்கு ரூ.5,000 கோடி, சென்னை நீர்நிலைகளை மறுசீரமைப்பு செய்திட ரூ.300 கோடி, ராமேசுவரம், மதுரை, பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.975 கோடி சிறப்பு மானியத்தை அளித்திட பரிந்துரைக்க வேண்டும்.
காவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு ஆகியவற்றை இணைப்பதற்காக ரூ.7,800 கோடி மானியம், பழைமையான கோயில்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் புனரமைக்கும் வகையில் ரூ.400 கோடி, பல்வேறு சாலைகளைப் பராமரிக்க ரூ.23,465 கோடி அளிக்கப் பரிந்துரைக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் கட்டடப் பராமரிப்பு, சிறுவர் நீதி அமைப்புகள், சென்னை கோட்டை, நீதிமன்றம், அருங்காட்சியகம், கலச மஹால் உள்ளிட்ட பாரம்பரிய இடங்களின் புனரமைப்பு, காவல் துறையை நவீனமயமாக்க ரூ.7,875 கோடி மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதிகளை அளிக்கப் பரிந்துரைக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.