கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு. சயான், மனோஜ் ஜாமீன் ரத்து
கொடநாடு கொள்ளை, கொலை வழக்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி: கொடநாடு கொள்ளை, கொலை வழக்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் 2017இல் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், சயன், மனோஜ் உள்ளிட்டோர் ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில், தில்லியில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் ஆசிரியர் சாமுவேல் மேத்யூவின் ஆவணப்படத்தில் சயன், மனோஜ் ஆகிய இருவரும் இச்சம்பவங்கள் தொடர்பாக கூறிய கருத்துகள் ஊடகங்களில் வெளியாகின.
அவர்களின் கருத்துகள் இந்த வழக்கின் சாட்சிகளைக் கலைக்கும் சூழலை உருவாக்கியுள்ளதால் அவர்களது ஜாமீனை ரத்து செய்யக் கோரி உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் பாலநந்தகுமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஜனவரி 18ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு விசாரணை மீண்டும் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் கடந்த சனிக்கிழமை இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அரசுத் தரப்பில் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.நடராஜன் ஆஜரானார். அவருடன் நீலகிரி மாவட்ட அரசு வழக்குரைஞர் பாலநந்தகுமார் உள்ளிட்ட அரசு வழக்குரைஞர்களும் ஆஜராகினர். சயன், மனோஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் ஜி.பிரபாகரன் தலைமையில் முன்னாள் அரசு வழக்குரைஞர் ஆனந்தன், செந்தில்குமார், ஆர்.செந்தில்குமார், பிரகாஷ்பாபு, விஸ்வநாதன், சசிகுமார் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
காலையிலும் மாலையிலும் இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி வடமலை இவ்வழக்கு விசாரணையை பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து நீலகிரி நீதிமன்றம் வெள்ளியன்று உத்தரவிட்டுள்ளது.
அரசுத்தரப்பு வழக்கறிஞரின் வேண்டுகோளை ஏற்று நீதிபதி வடமலை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.