தமிழ்நாடு

வரவேற்பு முதல் வழியனுப்புதல் வரை: மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பு ஒரு ரவுண்ட்-அப்!

DIN


சென்னையை அடுத்த மாமல்லபுரம் மற்றும் கோவளம் கடற்கரை அருகே சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோர் இரண்டு நாட்கள் சந்தித்துப் பேசினா். 

இரு தலைவர்களின் அலுவல்சாரா உச்சி மாநாடு திட்டமிட்டபடி இனிதே நிறைவு பெற்றது. இரு தலைவர்களும் தமிழகத்தில் அளிக்கப்பட்ட விருந்தோம்பலால் மகிழ்ச்சி அடைந்து தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டு புறப்பட்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்வு குறித்து ஒரு ரவுண்டப் இது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வின்போது சீனா மற்றும் இந்தியா இடையிலான கலை மற்றும் கலாசார அம்சங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவா்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனா்.

முதன்முறையாக சென்னை வந்த சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கு தமிழக பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் வகையிலான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து அங்கிருந்து கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதிக்குச் சென்ற அவா், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மாமல்லபுரத்துக்கு சாலை வழியாக பயணித்தாா். வழிநெடுக அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாமல்லபுரத்தை அடைந்த ஷி ஜின் பிங்கை, அா்ச்சுனன் தபசு அருகே பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றாா். வேட்டி, சட்டையில் அசத்தலாகத் தோன்றி ஷி ஜின்பிங்குக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் மோடி.

பிறகு மாமல்லபுரத்தை சுற்றிக் காட்டியபடி பிரதமர் நரேந்திர மோடி, ஷி ஜின்பிங்குடன் அளவளாவினார். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சியையும் இருவரும் கண்டு களித்தனர்.

அதன் பின்னா், மோடியும், ஜின்பிங்கும் இரண்டு மணி நேரமாகப் பேச்சுவாா்த்தை நடத்தினா். சீன அதிபருக்கு பிரதமா் மோடி அளித்த விருந்துக்கு நடுவே இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

சனிக்கிழமை இரண்டாம் நாள்!
வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இந்தியா, சீனா இடையே முக்கிய பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்றைய சந்திப்பு நடைபெற்றது.

சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஷி ஜின்பிங் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருந்து புறப்பட்டு கோவளத்தில் பிரதமர் நரேந்திர மோடி தங்கியிருக்கும் தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தார்.

அதன் பின்னர், காலை 10 மணி முதல் 11.45 மணி வரை இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தலைவர்கள் தலைமையில் இரு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் வர்த்தகம், ராணுவம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்ற பிறகு, சீன அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி தஞ்சாவூர் ஓவியம், காஞ்சிப்பட்டு தறி, சிற்ப வேலைகளை செய்வது உள்ளிட்டவற்றை நேரில் காட்டினார்.

இருவரும் பரஸ்பரம் நினைவுப்பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். சிறுமுகை பகுதியைச் சேர்ந்த நெசவாளர்கள் நெய்த காஞ்சிப்பட்டில் சீன அதிபரின் உருவம் நெய்யப்பட்ட சால்வையை ஜின்பிங்குக்கு பரிசளித்தார் மோடி; மேலும் ஒரு காஞ்சிப் பட்டுப் புடவையையும் ஜின்பிங்குக்கு மோடி பரிசளித்தார். அப்போது மோடியின் உருவப்படம் வரையப்பட்ட நினைவுப் பரிசை பிரதமருக்கு பரிசளித்தார் சீன அதிபர் ஜின் பிங்.

நிறைவாக, சீன அதிபருக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவுகளுடன் மதிய விருந்து அளித்தார் மோடி. இதன்பின், நண்பகல் 12.30 மணியளவில் கோவளத்தில் இருந்து கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன்  சீன அதிபருக்கு வழியனுப்பும் விழா நடைபெற்றது.

வாசல் வரை வந்து பிரதமர் மோடி, ஷி ஜின்பிங்கை கையசைத்து வழியனுப்பி வைத்தார். உற்சாகம் குறையாத கலை நிகழ்ச்சிகளுடன் ஷி ஜின்பிங் புறப்பட்டுச் சென்றார்.

மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டுச் சென்றார் ஷி ஜின்பிங்.  அதே சமயம், பிரதமர் நரேந்திர மோடியும் கோவளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வந்தார். அவருக்கும் தமிழக அரசு சார்பில் சிறப்பான வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரு தலைவர்களும் தனித்தனி விமானங்களில் சென்னையில் இருந்து புறப்பட்டனர்.

இருதரப்பிலும் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்தார். இருதலைவர்களும் பேசிய விவகாரங்கள் தொடர்பாக அவர் முழு தகவல்களையும் பரிமாறிக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT