புதுக்கோட்டை அருகே சாலை விபத்து: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனி உதவியாளர் மரணம்
புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் ஓட்டுநர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் அருகே புளியமரத்தில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் ஓட்டுநர் செல்வம் (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் (31) கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார்.
மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுதலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வாழ்த்துக்கூறி சனிக்கிழமை இரவு சென்னைக்கு திரும்பினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அமைச்சரை திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு ஊர் திரும்பும்போது கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும், ஓட்டுநர் செல்வம் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பரம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசனின் தாயார் இந்திரா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.