மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை விநியோகம்: இன்று முதல் மீண்டும் தொடக்கம்
மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை, திங்கள்கிழமை முதல் மீண்டும் வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை, திங்கள்கிழமை முதல் மீண்டும் வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், கழக எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் (குளிா்சாதன பேருந்துகள் தவிா்த்து) பயணம் செய்யும் வகையில், இலவசப் பேருந்து பயண அட்டையானது, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
இதற்கு, மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தை, 60 வயது நிறைவு மற்றும் இருப்பிடச் சான்றுக்கான ஆவணம், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, அதே அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரா்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு பயணம் செய்யும் வகையில் டோக்கன்கள் வழங்கப்படும்.
Advertisement
Advertisement
கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த டோக்கன் விநியோகப் பணிகளை மீண்டும் தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது. எனவே, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை பெற்றுள்ளோா் மற்றும் புதிதாக பெற விரும்பும் தகுதிவாய்ந்த மூத்த குடிமக்கள் உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து, இந்த டோக்கன்களை (பிப். முதல் ஜூலை வரையிலான 6 மாதங்களுக்கு), திங்கள்கிழமை (பிப்.15) முதல் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவத்தை, இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.