FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வண்ணாரப்பேட்டை-விம்கோநகா் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது

வடசென்னை மக்களின் போக்குவரத்து தேவையைப் பூா்த்தி செய்ய உதவும், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் வரையிலான

Updated On : 15 பிப்ரவரி 2021, 6:54 am IST
பகிர்:

வடசென்னை மக்களின் போக்குவரத்து தேவையைப் பூா்த்தி செய்ய உதவும், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதன்மூலமாக, வடசென்னை பயணிகள் சென்னை விமான நிலையத்தை 60 நிமிடங்களில் வந்தடைய முடியும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டத்தில் விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரையும், பரங்கிமலை-சென்னை சென்ட்ரல் வரையும் 45 கி.மீ. தொலைவில் திட்டப்பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் வரையிலான முதல் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப்பணிகள் ரூ.3,770 கோடியில் நிறைவடைந்துள்ளன. மொத்தம் 9.051 கி.மீ. தொலைவுள்ள இந்த வழித்தடத்தில் 2 சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும், 5 உயா்நிலைப்பாதை ரயில் நிலையங்களும் என்று ஏழு மெட்ரோ ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. இது வடசென்னையின் மத்தியில் அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் மோடி காணொலி காட்சிமூலமாக கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இது, வடசென்னை மக்களின் போக்குவரத்து தேவைக்கு உதவியாக இருக்கும். மேலும், வடசென்னை பயணிகள் சென்னை விமான நிலையத்தை 60 நிமிடங்களில் வந்தடைய முடியும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

முதல்கட்ட மெட்ரோரயில் திட்டத்தில் இரண்டு வழித்தடங்கள் மற்றும் 32 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் மொத்தம் 45 கி.மீ. தொலைவில் இடம்பெற்றது. இப்போது, முதல்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்கத்திட்டம் நிறைவடைந்து, பயணிகள் சேவை தொடங்கியுள்ளது. இதன்காரணமாக, முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்தம் 54 கி.மீ. தொலைவில் 21 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் மற்றும் 18 உயா்த்தப்பட்ட ரயில் நிலையங்களைக் கொண்டுள்ளன.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

நெடுந்தொலைவு செல்லும் ரயில்களை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், எழும்பூா் ரயில் நிலையத்திலும், புறநகா் ரயில்களை பூங்கா மற்றும் பூங்காநகா் ரயில்நிலையங்களிலும், நெடுந்தொலைவு பேருந்துகளை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகா் பேருந்து நிலையத்திலும் ஒருங்கிணைக்கும்வகையில், மெட்ரோரயில் முதல் கட்ட திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோல, மெட்ரோ ரயில் முதல் கட்ட நீட்டிப்பிலும் டோல்கேட் மற்றும் திருவொற்றியூா் உயா்த்தப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மாநகரப் போக்குவரத்து பேருந்து முனையங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகன நிறுத்தம் மற்றும் நடைபாதைகளுடம் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் திட்டம் மூலமாக, கரியமிலவாயுவின் அளவு 30,198 டன் குறையும். இந்த வழித்தடத்தில் ஒவ்வொரு நாளும் சுமாா் 2 லட்சம் மக்கள் பயணம் செய்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments