முகப்பு
தமிழ்நாடு

மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கக் கோரி முதல்வர் கடிதம்!

மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 22 ஆகஸ்ட், 2023 at 9:37 PM
முதல்வர் மு.க. ஸ்டாலின்
பகிர்:

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை நாட்டினரால் தாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22-8-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், 2023 ஆகஸ்ட் 21 ஆம் தேதி மட்டும் ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கவலைபடத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதோடு, மீனவர்களிடமிருந்த பொருள்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆதரவற்ற நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தாக்குதல் சம்பவங்களால் காயமடைந்த மீனவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இது மீனவர்களின் மீதான தாக்குதலின் தீவிரத்தை உணர்த்திடும் வகையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பகுதியைச் சார்ந்துள்ள நிலையில், இத்தகைய தொடர்ச்சியான வன்முறைச் செயல்கள், அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குவதுடன், அவர்களின் குடும்பங்களையும் சமூகங்களையும் பாதிக்கின்றன என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இத்தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின்முன் நிறுத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், உரிய தூதரக வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு, மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.