முகப்பு
தமிழ்நாடு

எல்லைமீறிய அஜித் ரசிகர்கள் காயம்: சேலம் திரையரங்கு கண்ணாடி உடைப்பு!

சேலத்தில் துணிவு திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 11 ஜனவரி 2023, 10:26 am IST
பகிர்:

சேலம்: சேலத்தில் துணிவு திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், திரையரங்கிற்குள் கூட்டத்தில் சிக்கி அஜித் ரசிகர் ஒருவரின் கால் முறிந்தது.

சேலம் மாவட்டத்தில் பல திரையரங்குகளில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியிடப்பட்டது.  நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட்ட நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கு முன்பு கூடினர். தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அஜித் ரசிகர்கள் அதிவேகமாக வாகனத்தை இயக்கி வந்தனர்.  தொடர்ந்து  அவ்வழியாக வந்த காரின் மீது ஏரியும்,  பட்டாசுகளை தலை மேல் வைத்து வெடித்தும் அஜித் ரசிகர்கள் அலப்பறையில் ஈடுபட்டனர். 

Advertisement

Advertisement

நேரமாகியும் திரையரங்கின் கதவு திறக்கப்படாததால் அஜித் ரசிகர்கள் கதவின் மீது ஏறி திரையரங்குக்குள் நுழைந்தனர். தொடர்ந்து திரையரங்கின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

கண்ணாடி உடைத்த போது அஜித்தின் ரசிகர் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே கூட்ட நெரிசல் சிக்கிய அஜித் ரசிகர் ஒருவரின் வலது கால் முறிந்தது. வழியில் துடித்த அந்த நபரை சக ரசிகர்கள் திரையரங்கில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அப்போது மது போதையில் இருந்த அந்த ரசிகர் ‘அல்டிமேட் ஸ்டார் அஜித்’ வாழ்க என முனங்கியபடி கதறித் துடித்தார். இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் அந்த நபரை ஏற்ற முயன்ற போலீசாரை தொடவிடாமல் அஜித்தை பார்க்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என கதறியபடியே தெரிவித்தார். ஒரு கட்டத்தில் அவரது நண்பர்கள் குண்டு கட்டாக தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே திரையரங்கிற்கு வெளியே இரு சக்கர வாகனத்தில் அதிகம் சத்தம் எழுப்பிய அருண் என்பவரின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பொதுவாக புதிய படம் வெளியாகும் போது ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால், அஜித் ரசிகர்களின் ஆரவாரம் எல்லை மீறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments