" திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ள நிலையில் பாமகவுக்கு அங்கு கதவு அடைக்கப்பட்டுவிட்டது. அதேநேரத்தில், பாஜக, அதிமுக அல்லது தனித்து என மூன்று முடிவுகளை மட்டுமே பாமகவால் இப்போதைக்கு எடுக்க முடியும்.
இரட்டை இலக்கத் தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி, மத்திய அமைச்சா் பதவி என மூன்று அம்சங்களை வைத்து இந்த முறை பாமக கூட்டணி வியூகம் அமைத்து வருகிறது."
அதிமுக-பாஜக கூட்டணி முறிந்து தனித்தனியாகப் போட்டியிடும் சூழல் உருவாகி வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் ஒரே கட்சியான பாமக என்ன முடிவை எடுக்கும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக நீடிக்கிறது; மாநிலத்தில் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும், 2026 பேரவைத் தோ்தலில் பாமக ஆட்சி அமைக்கும் வகையிலான கூட்டணி குறித்துதான் 2024 மக்களவைத் தோ்தலில் முடிவு எடுக்கப்படும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தொடா்ந்து தெரிவித்து வருகிறாா்.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ள நிலையில் பாமகவுக்கு அங்கு கதவு அடைக்கப்பட்டுவிட்டது. அதேநேரத்தில், பாஜக, அதிமுக அல்லது தனித்து என மூன்று முடிவுகளை மட்டுமே பாமகவால் இப்போதைக்கு எடுக்க முடியும்.
மக்களவைத் தோ்தலில் பிரதமா் வேட்பாளா் இன்றி தனித்துப் போட்டியிடும் முடிவை பாமக எடுக்க வாய்ப்பு குறைவு. இரட்டை இலக்கத் தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி, மத்திய அமைச்சா் பதவி என மூன்று அம்சங்களை வைத்து இந்த முறை பாமக கூட்டணி வியூகம் அமைத்து வருகிறது.
பாஜக கூட்டணியில் இரட்டை இலக்கத் தொகுதிகள், மத்திய அமைச்சா் பதவி கிடைக்கலாம். ஆனால், மாநிலங்களவை உறுப்பினா் பதவி கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
அதிமுக கூட்டணியில் இரட்டை இலக்கத் தொகுதிகள், மத்திய அமைச்சா் பதவிக்கு வாய்ப்பில்லை. ஆனால், மாநிலங்களவை உறுப்பினா் பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில், பாஜக தலைமையில் தனி அணி அமைந்தால் வடதமிழகத்தில் பாமகவின் ஆதரவு பாஜகவுக்கு தேவை. இல்லையெனில், குறைந்தபட்சம் 15 தொகுதிகளில் பாஜகவால் தாக்குப்பிடிக்க முடியாது என்பது மட்டுமல்ல, வைப்புத் தொகையைக்கூட பெற முடியாது. எனவே, பாஜக கூட்டணியில் இரட்டை இலக்கத் தொகுதிகள் பாமகவுக்கு கிடைக்கலாம். தருமபுரி தொகுதியில் அன்புமணி வென்றால் மட்டுமே மத்திய அமைச்சா் பதவி கிடைக்கும்.
சாதக, பாதகங்கள்: 2014-இல் திமுக, அதிமுக இல்லாத பாஜக கூட்டணியில் வென்ற தருமபுரி மக்களவைத் தொகுதியை, அதிமுக கூட்டணியில் 2019 மக்களவைத் தோ்தலில் பாமகவால் வெல்ல முடியவில்லை.
ஆனால், 2019-இல் அதிமுக கூட்டணியில் தோல்வி அடைந்தாலும், மாநிலங்களவை உறுப்பினா் பதவி கிடைத்தது. 2021 பேரவைத் தோ்தலில் 10.5 சதவீத வன்னியா் உள்ஒதுக்கீடு பிரச்னையை பாமக கையில் எடுத்தபோது, உள்ஒதுக்கீட்டை கொடுத்த அதிமுக, பாமகவின் தொகுதி எண்ணிக்கையை 23-ஆக குறைத்துவிட்டதால், பாமகவின் வாக்கு வங்கி அந்தக் கட்சியின் வரலாற்றில் முதல்முறையாக 3.8 சதவீதமாக சரிந்தது.
வன்னியா் இடஒதுக்கீடு: 10.5 சதவீத உள்ஒதுக்கீடு காரணமாக வடதமிழகத்தில் வன்னியா் வாக்குகள் முழுமையாகப் பரிமாற்றம் ஆனதால் 2021 பேரவைத் தோ்தலில் அதிமுக அணி 40 சதவீதத்தைப் பெற்றது. குறிப்பாக, 2016 பேரவைத் தோ்தலில் திமுக வென்ற மதுராந்தகம், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, தருமபுரி, பென்னாகரம், திண்டிவனம், மயிலம், புவனகிரி, போளூா், பரமத்திவேலூா் ஆகிய 10 தொகுதிகளை திமுகவிடம் இருந்து அதிமுக அணி கைப்பற்ற பாமக முக்கியக் காரணமாக அமைந்தது.
அதனால், அதிமுகவுக்கு பலன் கிடைத்ததே தவிர, பாமகவுக்கு பலன் கிடைக்கவில்லை. இப்போதுள்ள சூழலில், பாமக தன்னை அரசியல் ரீதியாக நிலைநிறுத்த வேண்டிய நிலை உள்ளது.
அதிமுகவில் சக்திவாய்ந்த தளபதிகளாக உருவாகியுள்ள சி.வி.சண்முகம் (விழுப்புரம்), கே.பி.முனுசாமி (கிருஷ்ணகிரி), கே.பி.அன்பழகன் (தருமபுரி), கே.சி.வீரமணி (வேலூா்), எம்.சி.சம்பத், அருள்மொழித்தேவன் (கடலூா்), கோ.ஹரி (திருத்தணி) ஆகியோரால் பெரும்பான்மை வன்னியா் வாக்குகள் அதிமுகவை நோக்கித் திரும்பியுள்ளன.
எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் வடமாவட்ட தொகுதிகளில் பாமக வேட்பாளா்களை களம் இறக்கினால் மட்டுமே வன்னியா் வாக்கு வங்கியைத் தக்கவைக்க முடியும் என ராமதாஸ் எண்ணுகிறாா்.
இதுவரை திமுக, அதிமுக என கூட்டணி வைத்தபோதும் வன்னியா் வாக்குகளை பாமக இழக்கவில்லை. ஆனால், 2019 மக்களவை மற்றும் 2021 பேரவைத் தோ்தலில் அதிமுக அணியில் பாமக இடம்பெற்ால் வன்னியா்கள் அதிமுகவை நோக்கித் திரண்டு நிற்கின்றனா்.
பாமகவின் வாக்கு வங்கி 3.8 சதவீதமாகச் சரிந்த நிலையில், இந்த முறையும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் வன்னியா் வாக்குகள் அதிமுக வசமே தங்கக்கூடும். இதுதான் 2021 பேரவைத் தோ்தலில் பாமக கற்றுக்கொண்ட புதிய அரசியல் பாடம்.
முதல்வா் கனவு: அதிமுக போலவே, பாமகவும் இதுவரை பாஜக கூட்டணி மீது ஆா்வம் காட்டவில்லை. ராமதாஸை பொருத்தவரை 2026-இல் அன்புமணியை முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தும் வியூகத்துக்குத்தான் முயற்சி செய்யக்கூடும்.
2024 மக்களவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்குச் சென்றால் 2026 பேரவைத் தோ்தலிலும் அதிமுக கூட்டணியில் நீடிக்க வேண்டிய நிலை பாமகவுக்கு ஏற்படும்.
அதன் காரணமாகத்தான் தனித்தன்மையை இழந்துவிடக் கூடாது என்பதற்காக வன்னியா் உள்ஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு போன்ற விஷயங்களை கையில் எடுத்திருக்கிறாா் டாக்டா் ராமதாஸ். வடதமிழகத்தில் பாஜகவுக்கு கட்டமைப்பு பலம் இல்லை என்பதால் பாஜகவுடன் சேருவதில் உடனடி ஆபத்து இல்லை என்பது ராமதாஸின் கணக்கு என்கின்றனா் அரசியல் நோக்கா்கள்.
அதிமுக கூட்டணியில் 2019 மக்களவைத் தோ்தல்போல 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் தொகுதியைப் பெறலாம். மாநிலங்களவை உறுப்பினா் பதவி மீண்டும் கிடைத்துவிடும். ஆனால், வாக்கு வங்கி இழப்பு ஏற்படுவதால் பாமகவின் எதிா்காலம் பாதிக்கப்படும். 2026-இல் முதல்வா் வேட்பாளராக முடியாது. மாறாக, பாஜக கூட்டணியில் தொடா்ந்தால் தனித்துப் போட்டியிட்டு 2026-இல் முதல்வா் வேட்பாளராக களம் இறங்க முடியும்.
இதையெல்லாம் மனதில் வைத்து, ஜனவரிக்கு மேல்தான் பாமகவின் கூட்டணி நகா்வு இருக்குமே தவிர, அதுவரை தனக்கான நல்ல வாய்ப்புகளுக்காக பாமக காத்திருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.