மாணவர்களின் வருகையை அதிகரிக்கவே காலை உணவுத் திட்டம்: அமைச்சர் உதயநிதி
அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிப்பதற்காகவே முதல்வரின் காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிப்பதற்காகவே முதல்வரின் காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்’ என்ற முதல்வரின் உன்னத நோக்கத்தை செயல்படுத்திட, வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நல்ல நோக்கத்திற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், ரூ.404.41 கோடி செலவில் 31,008 பள்ளிகளில் பயிலும் 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத்திட்டத்தை விரிவுப்படுத்தி தொடங்கி வைக்கும் விதமாக திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உணவு பரிமாறி, அவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார்.
Advertisement
Advertisement
அதனைத் தொடர்ந்து, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. மாணவர்-மாணவிகளுக்கு உணவை பரிமாறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே முதல்வரின் காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.