கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டியில் கிணற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டியில் கிணற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியைச் சேர்ந்த அந்தோணி மகன் ஜான் என்ற சாமுவேல் (12). இவர் லாயல் மில் காலனி அரசு உயர்நிலை பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தாமஸ் நகரைச் சேர்ந்த ராஜா மகன் ஆகாஷ் (13). இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால் இன்று காலை ஜான் என்ற சாமுவேல், ஆகாஷ் ஆகியோர் தனது நண்பர்கள் 10 பேருடன் கூசாலிபட்டியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர்.
அவர்கள் நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, ஜான் என்ற சாமுவேல் மற்றும் ஆகாஷ் ஆகியோர் நீரில் மூழ்கினர். இதைப் பார்த்து அவரது நண்பர்கள் உடனடியாக அவர்கள் இருவரையும் தேடினர். நீண்ட நேரம் ஆகியும் அவர்களை மீட்க முடியாததால் உடனடியாக ஊரில் உள்ள பெரியவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி நீரில் மூழ்கி இருந்த ஜான் என்ற சாமுவேல் மற்றும் ஆகாஷ் ஆகியோரை மீட்டனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவர்கள் இரண்டு பேரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இரண்டு சிறுவர்கள் கிணற்று நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்து அரசு மருத்துவமனை வளாகத்துக்கு வந்த சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, இறந்த சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.